அதிமுகவை கைப்பற்றப் போகிறாரா ரஜினி?

will Rajini take over Admk? will Rajini lead Admk-Bjp front in tamilnadu assembly elections?

by எஸ். எம். கணபதி, Aug 15, 2019, 15:47 PM IST

அதிமுக கூட்டணிக்கு ரஜினி தலைமை ஏற்பாரா அல்லது அதிமுக கட்சிக்கே தலைவராகி விடுவாரா என்ற தமிழக அரசியலில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது.

தமிழக அரசியலில் எப்பவுமே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு சமயத்திலும் ஏதாவது ஒரு பிரச்னை கிளம்பி, தொலைக்காட்சி விவாதங்களுக்கு தீனி போடும். இப்போது, ரஜினி ஒரு பரபரப்பான விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.

துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் பணிகள், உரைகள் பற்றிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த விழாவில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். வெங்கய்ய நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ரஜினிகாந்த் உள்பட பல விஐபிக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் ரஜினி பேசியதுதான் இப்போதைய விவாதத்திற்கு ஆரம்பப் புள்ளியாக உள்ளது. அவர் பேசும் போது, ‘மிஷன் காஷ்மீர் ஆபரேஷன்’ நடவடிக்கையை நான் மனதார பாராட்டுகிறேன்’ என்று காஷ்மீருக்கு சிறப்பு சலுகை ரத்து பண்ணி, அதை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை பாராட்டினார். அது மட்டுமல்ல. அதை திறமையாக செயல்படுத்திய விதத்துக்கு தலை வணங்குகிறேன் என்றும் ஓங்கிச் சொன்னார்.

திமுக உள்பட எதிர்க்கட்சிகள் எல்லாம் காஷ்மீர் விஷயத்தில் மத்திய அரசு எதேச்சதிகாரமாக நடந்துள்ளதாக எதிர்ப்பு தெரிவி்த்திருக்கிறார்கள். சிறப்பு சலுகையை ரத்து பண்ணுவதற்கு, அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வராமல் ஜனாதிபதி உத்தரவு மூலம் செய்ததை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, அதற்கு நேர் மாறாக ரஜினி, அந்த விஷயத்தில் பிஜேபியை பாராட்டியிருக்கிறார். ஏற்கனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதை எல்லா கட்சிகளும் கடுமையாக விமர்சித்த போது, போராட்டக்காரர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி சொல்லி, அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதற்குப் பிறகு சில மாதங்கள், அரசியலில் தீவிரம் காட்டாமல் ரஜினி மவுனமாகவே இருந்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்த போது, ‘‘அதிமுக-பிஜேபி கூட்டணி தோல்வி அடைந்திருப்பது, தமிழ்நாட்டில் பிஜேபிக்கு பின்னடைவுதான்’’ என்று கருத்து தெரிவித்ததுடன், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏற்கனவே ரஜினிக்கு நெருக்கமாக இருந்த அரசியல் விமர்சகர்கள் தமிழருவி மணியன், ரவீந்திரன் துரைசாமி போன்றவர்கள், ‘‘ரஜினி தனிக்கட்சிதான் துவங்குவார், பிஜேபியில் சேர மாட்டார்’’ என்று உறுதியாக சொல்லி வந்தார்கள். இந்த சமயத்தில், ‘‘தமிழகத்தில் பிஜேபிக்கு பின்னடைவு’’ என்று ரஜினி பேசியது, அவர் தனிக்கட்சிதான் துவங்குவார் என்பதை உறுதி செய்வது போலிருந்தது.

ஆனால், இப்போது காஷ்மீர் விவகாரத்தில் பிஜேபி அரசை மனதார பாராட்டுகிறேன் என்று துணிச்சலாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்ல. பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும், கிருஷ்ணன், அர்ஜூனன் மாதிரி இருக்கிறார்கள் என்று ஓங்கிப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.

இதன் மூலம், ரஜினி இன்னமும் பிஜேபிக்கு தீவிர விசுவாசியாகவே இருக்கிறார் என்பதை வெளிப்படையாக காட்டியிருக்கிறார். எனவே, அவரது ‘ஆன்மீக அரசியல்’ பயணம் பிஜேபியில் இருந்தும் தொடங்கலாம். அல்லது தனிக்கட்சி துவங்கி, பிஜேபி கூட்டணியில் சேரவும் செய்யலாம் என்ற பேச்சு எழுந்தது. அதே போல், ரஜினி இந்த முறை தனது பேச்சில் இருந்து பின்வாங்கவும் இல்லை. மவுனமாகி ஒதுங்கவும் இல்லை. மாறாக, காஷ்மீர் விஷயத்தில் தனது கருத்தை மீண்டும் உறுதியாக சொன்னார்.

அவர் அளித்த பேட்டியில், ‘‘எதை அரசியலாக்க வேண்டும், எதை அரசியலாக்கக் கூடாது என்பதை சில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதற்கு காஷ்மீர் ஒரு நுழைவு வாயிலாக உள்ளது, நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் பாராட்டுகிறேன்’’ என்று கூறினார். அதற்கு பிறகு, அவர் சொன்னதுதான் முக்கியமானது.

ஒரு நிருபர் அவரிடம், ‘‘ போயஸ் கார்டன் மீண்டும் தமிழக அரசியல் மையமாக மாறுமா?’’ என்று கேட்டார். அதற்கு அவர், ‘‘காத்திருந்து பாருங்கள்’’ என்று தெரிவித்தார். எனவே, ரஜினி தனிக்கட்சி தொடங்கி, அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்து கூட்டணிக்கே தலைமை ஏற்பார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இன்னொரு பக்கம், எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவுக்கு தலைமை வகிக்க சரியான தலைவராக இல்லை என்ற பேசப்படுவதால், அதிமுகவுக்கே ரஜினி தலைமை ஏற்பார் என்ற பேச்சும் அடிபடுகிறது. காரணம், எடப்பாடியும், ஓபிஎஸ்சும், நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் பிஜேபிக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

முத்தலாக் சட்டத்தை மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்தது. ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், மக்களவையில் ஆதரித்து வாக்கு அளித்திருக்கிறார். இது வரை அதிமுகவில் இருந்து அவரை யாரும் கேள்வி கேட்கவில்லை. எடப்பாடியால் கூட ரவீந்திரநாத்திடம் விளக்கம் கேட்க முடியவில்லை. காரணம், ரவீந்திரநாத் பேசுவதற்கு முன்பு ஓ.பி.எஸ் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியதுதான். ஆக, பிஜேபியின் பிடியில் இருக்கும் அதிமுக, அந்த கட்சி சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவது போல், கட்சித் தலைவராக ரஜினியைக் கொண்டு வரச் சொன்னால் கூட தலையசைத்தாலும் அசைத்து விடுவார்கள்.

ஆனால், அதிமுக தொண்டர்கள் எப்படி அதை ஏற்பார்கள்? ‘‘இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’’ என்று சொன்னவராச்சே ரஜினி. அதை அதிமுக தொண்டர்களுமா மறந்து விடுவார்கள்?

காஷ்மீரில் கட்டுப்பாடுகளுடன் ஈத் திருநாள் கொண்டாட்டம்; வங்கிகள், ஏடிஎம்கள் திறப்பு

You'r reading அதிமுகவை கைப்பற்றப் போகிறாரா ரஜினி? Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை