பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
கடந்த முறை மோடி பிரதமராக இருந்த போது நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்தாண்டு சிறுநீரக கோளாறால் அவதிப்பட்ட ஜெட்லி, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அது முதல் அரசியலில் பெரிதும் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் உடல்நிலையைக் காரணம் காட்டி, சமீபத்தில் நடந்த மக்களவை பொதுத் தேர்தலிலும் போட்டியில்லை என்று அறிவித்து, அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.
கடந்த 9-ந் தேதி திடீரென ஜெட்லியின் உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெட்லியின் உடல்நிலை கடந்த சில நாட்களாகவே கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று நண்பகல் 12.07 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
66 வயதான அருண் ஜெட்லி, பாஜகவின் மூத்த தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்து வந்தார். அவருடைய மறைவு பாஜக தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெட்லியின் மறைவு குறித்த தகவல் அறிந்ததும் மத்திய அமைச்சர்கள் பலரும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்தனர். ஐதராபாத்தில் உள்ள பாஜக தலைவர் அமித் ஷாவும் டெல்லி விரைந்துள்ளார். வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியும் பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறுக்கு வழியில் எடியூரப்பாவை முதல்வராக்கிய பா.ஜ.க ஊழல் பற்றி பேசலாமா? எஸ்டிபிஐ கேள்வி