தமிழகம் இப்போதுள்ள சூழ்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வெளிநாடு பயணம் தேவையற்றது. முதல்வர் வெளிநாடு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி லண்டன் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். துபாய், லண்டன், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 14 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொண்டு செப்டம்பர் 10-ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த சுற்றுபயணத்தை மேற்கொண்டு இருப்பதாகவும், அதே போன்று தகவல் தொழில்நுட்ப துறை, பால்வளத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளை மேம்படுத்துவது குறித்தும் வெளிநாட்டு சுற்றுபயணத்தில் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது பல்வேறு பிரச்னைகள் தலை விரித்தாடி வரும் நிலையில் முதல்வர் வெளிநாட்டு பயணம் என்பது ஏற்புடையதல்ல. தமிழகத்திற்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுதுறை எச்சரிக்கை விடுத்து, அதன் அடிப்படையில் போலீசார் தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் மூலம் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பொருளாதார சரிவின் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தொழில்துறை முடங்கியுள்ளது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக காலி குடங்களுடன் மக்கள் வீதி வீதியாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இதுமட்டுமின்றி 2019 மார்ச் மாதம் வரை கடன் அளவு 3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இப்படி நாளுக்கு நாள் நிதி பற்றாக்குறையால் தமிழக அரசு தள்ளாடி வரும் நிலையில், முதல்வர் உள்பட அமைச்சர்கள் வெளிநாடுகளில் சுற்றுபயணம் மேற்கொள்வது என்பது தமிழக அரசின் நிதிநிலையை மேலும் மோசமாக்கி விடும். ஆகவே இப்போது வெளிநாடு பயணம் மேற்கொள்வது என்பது தேவையற்றது. முதல்வர் வெளிநாடு பயணத்தை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முஸ்தபா கூறியுள்ளார்.