எடப்பாடி வெளிநாடு டூர் : முதல்வர் பொறுப்பு வகிக்கப் போவது யாரு? சுழன்றடிக்கும் சர்ச்சை

TN cm edappadi palani samys foreign visit, controversy over not appointing acting cm

by Nagaraj, Aug 26, 2019, 13:21 PM IST

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் லண்டன், அமெரிக்கா என வெளிநாட்டு டூர் கிளம்ப தயாராகி விட்டார். இதனால் முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைத்து விட்டு செல்லப் போகிறார்? தனது இலாகாக்களை யாரிடம் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறார்? என்பதில் தான் பல்வேறு சர்ச்சைகள் றெக்கை கட்டிப் பறக்கின்றன. இதற்கெல்லாம் அவர் வெளிநாடு கிளம்பும் முன் விடை கிடைக்குமா? என்பது தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, அதிமுகவிலேயே பெரிய எதிர்பார்ப்பையும், சிறிது சலசலப்பையும் கூட உண்டாக்கியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் அதிமுகவில் ஏகப்பட்ட குழப்பங்கள் அரங்கேறின. சசிகலா தரப்பால் முதல்வர் பதவியிலிருந்து ஓபிஎஸ் தூக்கியடிக்கப்பட்டார். இதனால் தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ் தனி அணி தொடங்க, அவர் பின்னாலும் சில எம்எல்ஏக்களும், கட்சி நிர்வாகிகளும் ' திரண்டனர்.

கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா வோ, முதல்வர் நாற்காலிக்கும் ஆசைப்பட்டார். இதனால் எம்எல்ஏக்களை தக்க வைக்க கூவத்தார் கலாட்டா வெல்லாம் நடந்தது. அப்போது சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு வர சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று.

இதனால் திடீர் முதல்வரானார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா வால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடியோ, கொங்கு மண்டல அமைச்சர்களின் துணையுடன் சாதுர்யமாக காய்களை நகர்த்தி, சசிகலா கும்பலையே ஓரங்கட்டினார்.தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்சை மீண்டும் இணைத்துக் கொண்டு துணை முதல்வராகவும் ஆக்கி விட்டார். இதற்கெல்லாம் காரணம் டெல்லி பாஜகவின் கைங்கர்யம்தான் என்றும் கூறப்பட்டது.

ஆனால் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைப்பு நடந்தாலும், இன்று வரையிலும் இரு அணியினரும் தனித்தனியாகத்தான் செயல்பட்டு வருகின்றனர் என்பது கண்கூடாகவே தெரிகிறது. இதனால் எடப்பாடி ஆட்சி எவ்வளவு நாளைக்கு நீடிக்குமோ? எப்போது கவிழுமோ என்றெல்லாம் கூட பரபரப்பு கிளம்பியது. ஆனால் எடப்பாடியின் ராஜதந்திரத்தை சும்மா சொல்லக் கூடாது.

கொங்கு மண்டலத்தின் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி அன்கோவை பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஓபிஎஸ்சை டம்மியாக்கி விட்டார். அதிமுகவை கைப்பற்றுவேன் என்று கெத்து காட்டிய டிடிவி தினகரனை மொத்தமாகவே காலி செய்து விட்டார். இதனால் ஆட்சியிலும், கட்சியிலும் எல்லாமே நான் தான் என்ற நிலைமையை எடப்பாடி உருவாக்கி விட்டார்.

இந்த நிலையில் தான் முதல்வராக பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக வெளிநாடு டூர் கிளம்ப எடப்பாடி தயாராகி விட்டார். லண்டன், அமெரிக்காவுக்கு 13 நாள் டூர் அடிக்கிறார் எடப்பாடி . தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு டூர் என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது. நாளை மறுநாள் டூர் கிளம்பும் எடப்பாடியுடன் , அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், பெஞ்சமின் , உதயகுமார், ராஜேந்திர பாலாஜி போன்றோர் அவ்வப்போது இணைந்து கொள்ள உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடியின் இந்த வெளிநாட்டு டூர் விவகாரம் தான் கடந்த சில நாட்களாக பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. எடப்பாடி வெளிநாடு செல்வதை, சீன் காட்டப் போகிறாரா? என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலில் கிண்டலடித்தார். அப்புறம், தொழில் முதலீடுகளை ஈர்க்கப் போவதாக எடப்பாடி கூறியதை குறிப்பிட்டு, தொழில் முதலீடு நாட்டுக்கா? இல்லை எடப்பாடிக்கா? என ஸ்டாலின் கேள்வி கேட்டது பரபரப்பாகி விட்டது.

அடுத்ததாக வெளிநாடு செல்லும் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பொறுப்பு மற்றும் தான் வகிக்கும் இலாகாக்களின் பொறுப்பை யாரிடம் கொடுத்து விட்டுச் செல்லப் போகிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ஏனென்றால்
முதல்வர் பொறுப்பு வகிப்பவர்கள் வெளிநாட்டுக்கு செல்லும்போது துறை சார்ந்த பொறுப்புக்களை, தமக்கு அடுத்த இடத்தில் உள்ள ஒரு மூத்த அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டு செல்வது தான் மரபாக இருந்து வருகிறது. இதற்கு ஆளுநரிடம் ஒப்புதலும் பெற வேண்டும். அதன்படி துணை முதல்வர் ஓபிஎஸ் வசம் முதல்வர் பொறுப்பை ஒப்படைப் பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, பொறுப்பை ஒப்படைப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் யாரை நம்பியும் தனது பொறுப்புக்களை எடப்பாடி ஒப்படைக்க தயாராக இல்லை என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

ஓபிஎஸ்சிடம் பொறுப்பை ஒப்படைப்பது குறித்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வரைபஞ்சாயத்து சென்றதாகக் கூட கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் வசம் பொறுப்பை கொடுத்து வெளிநாட்டுக்கு சென்றால், ஓபிஎஸ் ஏதாவது தில்லாலங்கடி செய்து தனது முதல்வர் பதவிக்கு ஆப்பு வைத்துவிடுவார் என எடப்பாடிக்கு பயமாம். அதனால் அமித் ஷாவிடமே அந்த யோசனைக்கு மறுத்து விட்டாராம் எடப்பாடி .

இதனால் தனது பொறுப்புக்களை துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் ஒப்படைக்காமல் தனக்கு நெருக்கமான கொங்கு மண்டல அமைச்சர்கள் தங்கமணி அல்லது வேலுமணி ஆகிய இருவரில் ஒருவரிடம் ஒப்படைப்பார் என்றும் கூட அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபட்டது வந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி யாரையும் நம்பத் தயாராக இல்லையாம்.தனது பொறுப்புக்களை யாரிடமும் ஒப்படைக்கப்போவதில்லையாம். வெளிநாடு சென்றாலும், முக்கிய முடிவுகள் குறித்து வெளிநாட்டில் இருந்தபடியே அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த நடத்துவாராம். முக்கியமான உத்தரவுகள், அறிவிப்புகள், கோப்புகளில் கையெமுத்து போடுவது போன்றவற்றையும் வெளிநாட்டில் இருக்கும் இடத்தில் இருந்து கவனித்துக் கொள்ளப் போகிறாராம். இமெயில்,பேக்ஸ் மூலம் எல்லாமே நடக்கும் என்று எடப்பாடி முடிவெடுத்து விட்டாராம்.

இதற்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் கொடுப்பாரா? டெல்லியிலிருந்து ஆட்டிப் படைக்கும் பாஜகவும் சம்மதிக்குமா? என்பது எடப்பாடியார் நாளை மறுதினம்ர் தெரிந்துவிடத்தான் போகிறது. முதல்வர் எடப்பாடி, பொறுப்பை யாரிடமும் ஒப்படைக்காமல் சென்றால் அதிமுகவிலேயே சலசலப்பு ஏற்படும் என்பதும் நிச்சயம் என்றும் இப்போதே பேச்சு எழத் தொடங்கியுள்ளது.

எடப்பாடி முதல்வர் பொறுப்பை ஒப்படைக்க தயங்குவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியுள்ளார். கடலூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளுக்கு 13 நாள் பயணம் செல்கிறார். பொதுவாக ஒரு மாநில முதல்வர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அவரது பொறுப்புகளை முக்கிய அமைச்சர்களிடம் ஒப்படைத்து செல்வது வழக்கம். ஆனால் மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் அவர், தனது பணிகளை யாரிடமும் ஒப்படைக்க வில்லையா? என சந்தேகம் தோன்றுகிறது. ஒருவேளை, வெளிநாட்டுக்கு சென்று விட்டு திரும்பும் போது, பதவி பறிபோகும் என பயப்படுகிறாரா? என்று தெரியவில்லை என்று விமர்சித்துள்ளார்.

சிறப்பு குறைதீர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

You'r reading எடப்பாடி வெளிநாடு டூர் : முதல்வர் பொறுப்பு வகிக்கப் போவது யாரு? சுழன்றடிக்கும் சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை