ஊழல், பாலியல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மத்திய அரசின் உயர்அதிகாரிகள் 22 பேர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட உள்ளனர்.
மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள், திறமையாக பணியாற்றாதவர்கள் என்று கணக்கெடுத்து, அவர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை கடந்த ஜூனில் அரசு கொண்டு வந்தது. கடந்த ஜூன் 27ம் தேதியன்று 27 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது வரி விதிப்பு துறைகளில் பணியாற்றும் 22 உயர் அதிகாரிகளை கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம், ஜி.எஸ்.டி, சுங்கவரி, கலால் வரித் துறையில் பணியாற்றும் இந்த அதிகாரிகள் மீது ஊழல் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. வரிவிதிப்பில் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி, வரிசெலுத்துவோரை நேர்மை என்ற பெயரில் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் இதில் அடங்குவர்.
‘‘வருமான வரி நிர்வாகத் துறையில் சில கருப்பு ஆடுகள் உள்ளன. அவர்கள் வரி செலுத்துவோரை துன்புறுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பும் உறுதியான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. அது தொடரும்’’ என்று சமீபத்தில் பிரதமர் மோடி கூறியிருந்தார்.
அதன்படி, தற்போது 22 அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட உள்ளனர். கே.கே.யுகேய், எஸ்.ஆர்.பராத்தே, கைலாஷ் வர்மா, கே.சி.மண்டல், எம்.எஸ்.தாமோர், ஆர்.எஸ்.கோஜியா, கிஷோர் படேல், சோலங்கி, எஸ்.கே.மண்டல், கோவிந்த்ராம் மாளவியா, சார்பர்கரே, அசோக்ராஜ், தீபக் கனியன், பிரமோத்குமார், முகேஷ் ஜெயின், நவ்நீத்கோயல், அசிந்திய குமார் பிரமாணிக், வி.கே.சிங், சதுர்வேதி, அசோக், லீலாமோகன்சிங், வி.பி.சிங் ஆகிய 22 அதிகாரிகளுக்கும் விதி56(ஜெ)-ன் கீழ் கட்டாய ஓய்வு அளிப்பதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக நிதியமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வருமான வரியை ரத்து செய்யுங்க; பொருளாதார வளர்ச்சிக்கு சு.சாமி கொடுக்கும் 5 டிப்ஸ்