நன்றாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இரவில் உறங்குவதில் பிரச்னை இருக்காது. உடற்பயிற்சி, வளர்சிதை மாற்றத்தையும் ஹார்மோன் சுரப்பையும் ஊக்குவிக்கும். இரவில் நாம் அதிகமாக கார்பன்டைஆக்ஸைடு என்னும் கரியமில வாயுவை வெளியிடுகிறோம். ஒருநாளில் ஒரு மனிதன் சராசரியாக 1 கிலோ கிராமுக்கும் அதிகமான அளவு கார்பன்டைஆக்ஸைடு வாயுவை வெளியிடுகிறான். உடற்பயிற்சி மற்றும் தீவிர உடலுழைப்பில் ஈடுபடுகிறவர்கள் வெளியிடும் கார்பன்டைஆக்ஸைடின் அளவு இன்னும் அதிகமாக இருக்கும்.
வீட்டின் உள்ளே மற்றும் படுக்கையறையில் சில தாவரங்களை வைப்பதன் மூலம் இரவில் நாம் அதிக ஆக்ஸிஜன் என்னும் பிராண வாயுவை சுவாசிக்க முடியும். வீட்டுக்கு அழகிய தோற்றத்தையும் தாவரங்கள் அளிக்கும். ஆகவே, லில்லி போன்ற அழகிய பூந்தாவரங்களை படுக்கையறையில் வைக்கலாம்.
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது கரியமில வாயுவை எடுத்துக்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்றிலுள்ள நச்சுப்பொருள்களை தாவரங்கள் அகற்றுகின்றன. தாவரங்களுக்கு மனஅழுத்தம் மாற்றி, சூழலை இதமாக மாற்றும் தன்மையும் உண்டு.
கற்றாழை: சருமத்திற்கு நன்மை பயப்பதோடு, தூக்கத்தை தூண்டும் தன்மையும் கற்றாழைக்கு உண்டு. கற்றாழையின் உள்புறமுள்ள பசைபோன்ற பாகம் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்களான ஆன்ட்டிஆக்ஸிடெண்டுகள் நிறைந்தது. அது செரிமானத்திற்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு ஆற்றலையும் வலுப்படுத்துகிறது. இரவில் கற்றாழை ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது. நாம் சுவாசிக்கும் காற்று சுத்தமாவதால் நன்றாக உறங்க முடிகிறது. இதற்கு சிறிதளவு நீரும் நேரடியான சூரிய ஒளியும் அவசியம்.
ரோஸ்மேரி: சமையலில் சுவையூட்டியாக பயன்படும் ரோஸ்மேரி தாவரம், நல்ல உறக்கத்தையும் தருகிறது. படுக்கையறையிலுள்ள காற்றை சுத்தப்படுத்துவதோடு, மன அழுத்தத்தை நீக்கி, உற்சாகமான மனவோட்டத்தை அளிக்கக்கூடியதும்கூட. நல்ல சூரியஒளி இதற்குத் தேவை. இதை சரியாக வெட்டி பராமரிக்கவேண்டும்.
சுகந்தி (லாவெண்டர்): லாவெண்டர் என்னும் சுகந்தி, எண்ணெய், சாறு, மலரிதழ்கள் என்று பல வடிவங்களில் கிடைக்கிறது. இதற்கு நல்ல உறக்கத்தை தரும் ஆற்றலும், மனக்கலக்கத்தை மாற்றும் திறனும் உண்டு. கடைகளில் கிடைக்கும் தயாரிப்புகளை வாங்குவதை காட்டிலும் சிறு தொட்டியில் கிடைக்கும் லாவெண்டர் செடியை வாங்கி படுக்கையறையில் வைக்கலாம். இது அறைக்கு அழகை தருவதோடு நல்ல நறுமணமும் பரவச் செய்யும். படுக்கைக்குச் செல்லும் முன்னர் சுகந்தியை முகர்ந்தால் நிம்மதியாக உறங்கலாம்.
மல்லிகை: இரவில் ஆழ்ந்து உறங்கினால்தான் மறுநாள் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியும். மல்லிகைக்கு மனதுக்கு இதமளித்து, மனக்கலக்கத்தை போக்கி நல்ல உறக்கத்தை அளிக்கும் ஆற்றல் உண்டு.
சாமந்தி: சாமந்தி டீ நல்லதொரு பானம். இதன் சுவை விரும்பத்தக்கது. வீட்டுக்கு அழகை தரும். நீர் வடிந்து ஓடும் வசதியுள்ள தரையில் சாமந்தி விதைகளை ஊன்றினால் நன்றாக வளரும். இது ஆண்டு முழுவதும் வளரக்கூடிய தாவரமாகும்.