தமது வெளிநாட்டுப் பயணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தொழில்துறையில் தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈட்டுவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார். அதன்படி முதலில் இன்று காலை சென்னையிலிருந்து லண்டனுக்கு பயணம் மேற்கொண்டார். லண்டன் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் அரசு உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் விமான நிலையத்திற்கு திரண்டு வந்திருந்து வழியனுப்பி வைத்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அவருடைய தனி செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் புறப்பட்டு சென்றனர்.
லண்டன் புறப்படும் முன், சென்னை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன். நான் வெளிநாடு செல்வதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறார். நான் ஒன்றும் பெரிய தொழிலதிபர் இல்லை. சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் நேரில் சென்று அழைப்பு விடுத்தால் தொழில் அதிபர்கள் பலர் தொடங்க முன் வருவார்கள்.தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தர வேண்டும். பொருளாதரம் மேம்பாடு அடைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் இந்த பயணம்.
என்னுடைய இந்தப் பயணத்தை கொச்சைப்படுத்தி வரும் மு.க ஸ்டாலின் மட்டும் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு பயணம் செல்வதற்கான காரணத்தை இதுவரை அவர் தெரிவித்தது உண்டா? என்றும் கேள்வி எழுப்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசு முறைப் பயணத்தை சொந்தப் பயணம் என சொல்வது தவறான கருத்து என்றார்.