வெளிநாட்டு பயண மர்மம்... உண்மை காரணம் என்ன? மக்களுக்கு கூற வேண்டும்எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்

Mk Stalin questions again on cm edappadi Palani Samys foreign visit

by Nagaraj, Aug 28, 2019, 18:28 PM IST

வெளிப்படையாக நான் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்கு உள்நோக்கம் கற்பிக்கும் முதல்வர், தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களையும் உண்மையான காரணங்களையும் தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கேள்விக்கு முறையாக பதில் சொல்லாமல், உள்நோக்கம் கற்பிக்கும் முதலமைச்சருக்கு எனது கண்டனம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்தப் பயணம் என்று முதல்வர் தரப்பில் அறிவிக்கப்பட்டாலும், இந்தப் பயணம் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இன்று லண்டன் புறப்படும் முன் சென்னை நிலையத்தில் பேட்டியளித்த முதல்வர் பழனிச்சாமி, தமது பயணத்தை மு.க.ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் மு.க.ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதற்கான காரணத்தை இதுவரை தெரிவித்துள்ளாரா? என்றும் கேள்வி எழுப்பி விட்டுச் சென்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தொழிலதிபர்களைச் சந்தித்து தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,14 நாள் சுற்றுப்பயணமாக வெளிநாடு செல்லும் முன்பு இன்று பேட்டியளித்திருப்பது 'கேழ்வரகில் நெய் வடிகிறது, கேளுங்கள்' என்ற நமது நாட்டுப்புற முதுமொழியைப் போல போலிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது 'முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பிறகு, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு 'இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு' 2019 ஜனவரியில் நடைபெற்று 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு திரட்டி விட்டதாக, ஆடம்பரமாக விளம்பரம் செய்யப்பட்டது.

இந்த இரு மாநாடுகளிலும் போடப்பட்ட 402 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரப் போவதாகச் சொன்ன 5.42 லட்சம் கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வந்ததா? இல்லை.

தற்போது என் வெளிநாட்டுப் பயணத்தை கொச்சைப்படுத்துவதா? என்று கேட்டிருக்கிறார் முதலமைச்சர். நான் கேட்பது ஒரேயொரு கேள்விதான்.
இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்பு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்களுடன் 'படை, படையாக' வெளிநாட்டிற்கு, ரத கஜ துரக பதாதி போல், அரசு செலவில் சென்றார்கள்.

உலக முதலீட்டாளர்களைக் கவருவதற்காக நாங்கள் செல்கிறோம் என்று அறிவித்தார்கள். அப்போதே முதலமைச்சரும் போயிருந்தால் - அது வேறு விஷயம்.
ஆனால் உலக முதலீட்டாளர்கள் மாநாடு முடிந்து ஏழு மாதங்கள் கழித்து முதலமைச்சர் வெளிநாடு போவது ஏன்? இதுதான் என் கேள்வி.

இரு உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி முதலீடுகளைப் பெற முடியாத ஒரு முதலமைச்சர், வெளிநாடு சுற்றுப்பயணம் போவது 'கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவர், எப்படி வானம் ஏறி வைகுந்தம் காட்டுவார்' என்ற கேள்வி - எனக்கு மட்டுமல்ல - தமிழக மக்களுக்கே இப்போது எழுந்திருக்கிறது.

மு.க.ஸ்டாலின் மட்டும் ஏன் அடிக்கடி வெளிநாடு செல்கிறார் என்று இன்னொரு கேள்வி எழுப்பியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. துணை முதலமைச்சராக இருந்த நேரத்தில் நான் அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது நான் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் நிதியுதவி பெற்று வந்திருக்கிறேன்.

தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அனைவரும் முன்வந்தார்கள் என்றால் - எங்கள் ஆட்சியில் இருந்த நேர்மையும், உடனுக்குடன் முடிவு எடுத்து தொழில் முதலீடுகளை அனுமதிக்கும் நிர்வாக திறமையுமே காரணம்!

என்னுடைய தனிப்பட்ட பயணங்கள் எல்லாம் வெளிப்படையானவை. குடும்பத்தினருடன் செல்லும் சொந்தப் பயணங்களுடன், அரசுமுறை பயணமாகப் போவதை எடப்பாடி பழனிசாமி ஒப்பிடுவது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல; ஒப்பீடும் முறையானது இல்லை.

அரசு முறைப்பயணமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் வெளிநாடு செல்கின்றபோது - ஏற்கனவே ஏன் முதலீடுகளைப் பெற முடியவில்லை என்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று பிரதான எதிர்க்கட்சியின் சார்பில் நான் கேள்வி எழுப்புவதில் என்ன தவறு? பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் கேள்விக்கு முறையாக பதில் சொல்ல வக்கில்லாமல், உள்நோக்கம் கற்பிக்கும் முதலமைச்சருக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் வெளிப்படையாக வெளிநாடு செல்வதை மர்மம் என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய வெளிநாட்டுப் பயணத்தில் ஒளிந்து கிடக்கின்ற மர்மங்களை - உண்மையான காரணங்களை தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; ஏற்கனவே தமிழக மக்களிடையே பரவியிருக்கும் சந்தேகங்களுக்கு நேர்மையாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதைவிடுத்து, திசைதிருப்பும் முயற்சியினால் தினை அளவு நன்மையும் விளையாது என்ற அரிச்சுவடியைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் காட்டமாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You'r reading வெளிநாட்டு பயண மர்மம்... உண்மை காரணம் என்ன? மக்களுக்கு கூற வேண்டும்எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் பாய்ச்சல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை