இந்தியா-பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முழு அளவில் போர் ஏற்படும் எனவும், அது தான் இரு நாடுகளிடையேயான கடைசிப் போராக இருக்கும் என்றும் பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கொக்கரித்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த விவகாரத்தில், அம்மாநில மக்களை விட துடியாய் துடிக்கிறது பாகிஸ்தான். இந்தப் பிரச்னையில் உலக நாடுகளின் ஆதரவைப் பெற முயன்று பாகிஸ்தான் தோற்றது. சீனாவின் ஆதரவுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்ல முயன்றும் கடைசியில் மூக்குடைபட்டது.
இதனால் இப்போது இந்தியாவுக்கு எதிராக, மிரட்டல் பாணியை கையிலெடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகள் போரை நோக்கி சென்றால் இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பாகிஸ்தான் எந்த ஒரு எல்லைக்கும் போக தயாராக இருப்பதாக அவர் மிரட்டல் விடுத்தார். அணு ஆயுதப் போர் நிகழ்ந்தால் வென்றவர், தோற்றவர் என யாரும் இருக்கமாட்டார்கள் என கூறிய இம்ரான் கான், உலக நாடுகளுக்கு இத்தகைய போரை தடுப்பதற்கான மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக மிரட்டல் தொனியில் தெரிவித்திருந்தார். ஆனால் இம்ரான்கானின் இந்த மிரட்டலை எந்த நாடுமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில்,பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமது, இன்று ஒரு புது மிரட்டலை விடுத்துள்ளார். ராவல்பிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய அரசாங்கத்தால், காஷ்மீர் அழிவின் விளிம்பில் உள்ளது.
காஷ்மீர் விடுதலைக்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் முழு அளவிலான போர் மூளும். இந்தப் போர், இரு நாடுகளுக்கு இடையேயான கடைசிப் போராக இருக்கும். காஷ்மீர் பிரச்னை தீர வேண்டும் என ஐ.நா., விரும்பினால், அங்கு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும்.
இந்த விவகாரத்தில், முஸ்லிம் நாடுகள் மவுனம் காப்பது ஏன்? என பாகிஸ்தான் அமைச்சர் கொக்கரித்துள்ளார்.