தமிழக பாஜகவுக்கு ரஜினி தலைமையா? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்..

Will Rajini take over bjp state president post?

by எஸ். எம். கணபதி, Sep 3, 2019, 13:00 PM IST

தமிழக பாஜக தலைவராக யார் வரப் போகிறார் என்பது முன்னெப்போதும் அளவுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடைேய, ரஜினிகாந்த் தமிழக பாஜகவுக்கு தலைமை ஏற்க்கப் போவதாக திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்த பின்பு, வரும் 8ம் தேதியன்று ஐதராபாத் சென்று கவர்னர் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இதற்கிடையே, புதிய தலைவரை பாஜக நியமிக்குமா அல்லது இடைக்காலத் தலைவரை நியமிக்குமா என்பது தெரியவில்லை. காரணம், டிசம்பர் மாதம் வரை தமிழிசையின் பதவிக்காலம் உள்ளது. அவர் ராஜினாமா செய்து விட்டதால், டிசம்பரில் கட்சியின் அமைப்பு தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பிருக்கிறது. அப்படியானால், இடைக்காலத் தலைவர்தான் நியமிக்கப்படுவார்.

வழக்கமாக, பாஜகவில் மாநில தலைவர் பதவிக்கு பெரிய அளவில் போட்டி இருக்காது. கட்சியில் உள்ள சில சீனியர்களே டெல்லிக்கு சென்று பேசி ஒருவர் நியமிக்கப்பட்டு விடுவார். ஆனால், கடந்த 5 ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சி நடைபெற்று, மீண்டும் ஆட்சியில் அமர்ந்துள்ளதால் இப்போது பாஜக மாநில தலைவர் பதவியே மிகப் பெரிய பதவியாகி விட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர் பதவியை பிடிக்க மேலிடத் தலைவர்களிடம் எப்படி லாபி செய்வார்களோ அதே போல் பாஜகவிலும் லாபி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதில், பல பெயர்கள் அடிபடுகின்றன. பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், சீனிவாசன் என்று ஏராளமான பெயர்கள் பேசப்பட்டு வருகிறது.
ஆனால், பாஜகவை பொருத்தவரை பார்ப்பதற்குத்தான் ஜனநாயகக் கட்சி. மற்றபடி, திமுக, அதிமுகவைப் போல் தலைமை எடுப்பதுதான் முடிவு. எனவே, அமித்ஷா யாரை முடிவு செய்திருக்கிறாரோ, அவரே தலைவராக வருவார்.

இதற்கிடையே, பாஜகவுக்கு அவ்வப்போது ஆதரவு குரல் எழுப்பி வரும் நடிகர் ரஜினிகாந்த், கடைசியாக பிரதமரையும், அமித்ஷாவையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். வெங்கய்யநாயுடுவின் செயல்பாடுகள் குறித்த புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. அதில் உரையாற்றும் விருந்தினர்களின் வரிசையில் பெயர் இடம் பெறாவிட்டாலும் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மோடி-அமித்ஷாவை கிருஷ்ணன்-அர்ஜூனன் என்று பாராட்டினார். அதனால், அவர் பாஜகவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது.

இந்த சூழலில்தான், தமிழக பாஜகவுக்கு ரஜினி தலைமை ஏற்கப் போகிறார். அவரிடம் இதுபற்றி அமித்ஷா ஏற்கனவே பேசி விட்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஒருவேளை, ரஜினி தனது தர்பார் உள்ளிட்ட படங்களை முடிக்க கால அவகாசம் கேட்டால், பாஜகவில் உள்ள ஜூனியர் தலைவர் ஒருவர் தற்காலிக தலைவராக நியமிக்கப்படலாம். டிசம்பர், ஜனவரியில் ரஜினி, பாஜகவில் இணைந்து தலைவராக தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. அப்போது, அதிமுக, திமுக முக்கியப் புள்ளிகள் சிலர், பாஜகவில் சேருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இது குறித்து அதிமுக முக்கியப் பிரமுகர் கூறுகையில், ரஜினியைப் பொறுத்தவரை ஆளும்கட்சியை பகைத்து கொள்ளவே மாட்டார். அதனால்தான், அவர் திமுக, அதிமுக தொடங்கி, பாஜக, காங்கிரஸ் என்று எல்லா கட்சியினரிடமும் தொடர்பு வைத்திருந்தார். ஆனால், இனிமேல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமா என்று சந்தேகிக்கும் அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் சுருங்கி விட்டது. அதனால், ரஜினிக்கு அந்த கட்சியை எதிர்ப்பதில் துணிவு வந்திருக்கலாம்.

அதேபோல், அவருக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை மிக்கத் தலைவர்கள் இல்லாததால், திமுக, அதிமுகவை எதிர்ப்பதிலும் தைரியம் வந்திருக்கும். எனவே, அவர் பாஜகவில் இணைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவர் வந்தால் அதிமுகவில் இருந்து பலர் பிரிந்து வரலாம். திமுகவில் இருந்தும் சிலர் வரலாம் என்றார்.

எப்படியோ, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் வரும் வரை அரசியலில் பரபரப்பு நீடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

You'r reading தமிழக பாஜகவுக்கு ரஜினி தலைமையா? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை