மோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

Edappadi Palanisamy appealed the tamilnadu people to give warm reception to modi, xinping

by எஸ். எம். கணபதி, Oct 10, 2019, 09:51 AM IST

தமிழகத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியா, சீனா நாடுகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் சீன அதிபர் ஷி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையே 11, 12ம் தேதிகளில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை, மாமல்லபுரத்தில் நடைபெறுவது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கிறது. தமிழ்நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்ததற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்து, இரு உலகத் தலைவர்களையும் வரவேற்கிறேன்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வணிக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும், சீனாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது என்பது வரலாறு. பண்டைய சீன நாட்டின் தூதுவர் யுவான் சுவாங், பல்லவ நாட்டிற்கு வந்து சென்றிருக்கிறார் என்பதும், அக்காலத்தில் பல்லவ நாட்டின் துறைமுகமாக விளங்கிய இதே மாமல்லபுரம், இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் பொருத்தமானது என்றும் கருதுகிறேன்.
சீன நாட்டுடன் கடல் வழி வியாபாரம் மாமல்லபுரம் வழியாக நடைபெற்றதாக வரலாறு கூறுகிறது. அதேபோல், சோழர்கள் காலத்திலும், சீனாவுடனான வணிகத் தொடர்புகள் வலுவாக இருந்துள்ளது.

ஏற்கனவே 1956-ம் ஆண்டு, சீன நாட்டு பிரதமர் சூ என்லாய், மாமல்லபுரம் அருகிலுள்ள குழிப்பான்தண்டலம் கிராமத்திற்கு வந்ததையும் நினைவு கூற விரும்புகிறேன்.
சீன அதிபரின் வருகை, தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு நிகழ்வாகும். தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்க், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் உள்ளார்ந்த உணர்வோடு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் கூறியுள்ளார்.

You'r reading மோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை