நேர்மையான அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸ் இருந்தால்.. ஸ்டாலின் மீண்டும் சவால்

If Dr. Ramadas .. Stalins challenge again

by எஸ். எம். கணபதி, Oct 19, 2019, 17:53 PM IST

முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்த பின்பும், டாக்டர் ராமதாஸ், அப்படியானால் அதன் மூலப்பட்டா எங்கே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு மீண்டும் பதிலளித்துள்ள ஸ்டாலின், நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் எனது அறைகூவலை ஏற்கத் தயாரா? என்று கேட்டிருக்கிறார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தோ்தல் வரும் 21ம்தேதி நடைபெறவுள்ளது. நாங்குநேரி பிரச்சாரத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி தியேட்டரில் அசுரன் படம் பார்த்தார். பின்னர், அவர் இயக்குனர் வெற்றிமாறனுக்கும், நடிகா் தனுஷுக்கும் போனில் பாராட்டு தெரிவித்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், அசுரன் படம் மட்டுமல்ல, பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன். கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் டாக்டர் ராமதாஸ், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல, பாடம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆஹா... அற்புதம். அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவா்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம் என்று பதிவிட்டார்.

இதையடுத்து, ஸ்டாலின் தற்போது முரசொலி அலுவலகம் உள்ள நிலம் பரம்பரை பரம்பரையாக பட்டா நிலமாக வைத்திருந்தவர்களிடம் வாங்கிய நிலம் என்று பதில் கொடுத்தார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று சவால் விட்டார்.

இதற்குப் பின்பும், இவர்களின் மோதல் முடிவடையவில்லை. டாக்டர் ராமதாஸ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா? என்று கேட்டிருந்தார்.

மேலும், நிலம் அபகரிப்பு திமுகவினருக்கு முழு நேரத் தொழில்தானே? அனாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அதிமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் திமுக ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே திமுக தலைமை என்றும் கிண்டலடித்திருந்தார்.

இதற்கு மு.க.ஸ்டாலினும் உடனடியாக ட்விட்டரில் பதில் போட்டிருக்கிறார். அதில் அவர், முரசொலி அலுவலகம் தற்போது இருக்குமிடம் பஞ்சமி நிலம் எனும் பச்சைப் பொய் ஒன்றை மருத்துவர் அய்யா ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 'அது பஞ்சமி நிலமல்ல, பட்டா நிலம்' என்பதை ஆதாரத்துடன் அவருக்கு பதிலாக பதிவு கொடுத்தேன்.

அவர் பஞ்சமி நிலம் என நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார். இதை பஞ்சமி நிலம் என அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அவர் கூறியது பச்சைப் பொய் என்பதை ஊர்ஜிதம் செய்தால் அவரும், அவரது மகன் அன்புமணியும் அரசியலைவிட்டு விலகத் தயாரா என அறைகூவல் விடுத்திருந்தேன்.

நான் விடுத்த அறைகூவலை அவர் ஏற்பதாக உறுதிசெய்தால், அவர் இப்போது கேட்கும் நிலப்பதிவு ஆதாரம், மூல ஆதாரத்தைக் காட்டிட நான் தயார். மருத்துவர் அய்யா நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அறைகூவலை ஏற்று ஆதாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம். நான் தயாராக இருக்கிறேன்.

விவகாரத்தை திசை திருப்பாமல், அவரது வழக்கமான பாணியில் நழுவிடாமல் இந்தமுறை அறைகூவலை ஏற்பார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

You'r reading நேர்மையான அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸ் இருந்தால்.. ஸ்டாலின் மீண்டும் சவால் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை