கொலை மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 6வது இடம்.. ஸ்டாலின் கடும் விமர்சனம்..

tamilnadu police department fails in all aspects: stalin

by எஸ். எம். கணபதி, Oct 23, 2019, 16:22 PM IST

தமிழ்நாடு காவல்துறை, வரலாறு காணாத கடும் சுனாமியில் சிக்கி விட்டது. அதனால்தான், அதிக கொலைகள் நடந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 6வது மாநிலமாக உள்ளது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

நாட்டிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்த பச்சைப் பொய்ப் பிரச்சாரத்தின் ஈரம் காய்வதற்குள், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2017-ஆம் ஆண்டிற்கான குற்ற விவர அறிக்கை வந்துள்ளது. அதில், இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று, கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் 6வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நாட்டில் உள்ள 19 மாநகரங்களில் 162 கொலைகள் நடைபெற்று, கொலைகள் நடந்த மாநகரங்களின் பட்டியலில் 4-வது இடத்தில் சென்னை உள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பது, தமிழகப் பொதுமக்களுக்கு ஆதாரப் பூர்வமாகத் தெரிய வந்திருக்கிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2016-ல் 1511 கொலைகளும், 2017-ல் 1466 கொலைகளும், 2018-ல் 1488 கொலைகளும் நடந்துள்ளதாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலம், இந்த மூன்று வருடங்களில் மட்டும் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 4465-ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழகச் சட்டமன்றத்தில், 2017-ல் 1466 கொலைகள் மட்டுமே நடைபெற்றன என்று கூறி விட்டு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்திற்கு, அதே வருடத்தில் 1613 கொலைகள் நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க. அரசு தெரிவித்துள்ளது. இதிலிருந்து தமிழகச் சட்டமன்றத்திற்கே முதலமைச்சர் உண்மையை மறைத்து, தவறான தகவலைத் தந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

ஆளுங்கட்சியினரின் சொல்படி, காவல்துறையில் பணி நியமனம், இட மாற்றம், ஒவ்வொரு வழக்கிலும் அதிமுகவினரின் தலையீடு, காவல் நிலையங்கள் எல்லாம் அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் இயங்குவது என்று, ஒரு தரங்கெட்ட ஆட்சியை முதலமைச்சர் நடத்திக் கொண்டிருப்பதால், இன்றைக்கு கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலத்தின் முதல்வர் என்ற ஐ.எஸ்.ஐ. முத்திரையை பழனிசாமி பெற்றிருக்கிறார்.

பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியான காவல் துறைச் சீர்திருத்தம், தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் படு தோல்வியடைந்துள்ளது. வாக்கி டாக்கி ஊழல், ஒரு குறிப்பிட்ட கம்பெனிக்கே டெண்டர் கொடுக்கும் ஊழல், பணி ஓய்வுக்குப் பிறகும் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டவர்கள், குட்கா ஊழலில் ஒரு டி.ஜி.பி. வீட்டிலேயே சி.பி.ஐ ரெய்டு நடந்தது என்று, தமிழ்நாடு காவல்துறை, வரலாறு காணாத கடும் சுனாமியில் சிக்கி விட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் கூட தத்தளித்து நிற்கிறார்கள் என்பது வேதனையானது. இதனால், கூலிப் படைகளின் அட்டகாசம் தலைதூக்கி, எங்கு பார்த்தாலும் கொத்துக் கொத்தாகக் கொலைகள் என்ற பயங்கரமான நிலை தமிழகத்தில் நிலவி, இன்றைக்கு இந்தியாவிலேயே ஆறாவது கொலை மாநிலம் என்ற அவப்பெயரை மாநிலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சி தேடித் தந்திருக்கிறது.
கொலையில் மட்டுமல்ல, இந்தியத் தண்டனைச் சட்டப்படியான குற்றங்களிலும் இந்தியாவிலேயே 6-வது மாநிலம், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் கொலையில் 4-வது மாநிலமாகவும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வன்முறையில் ஏழாவது இடத்திலும் தமிழகம் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையால் (போஸ்கோ) பாதிக்கப்பட்டவர்களில் 8-வது இடத்திற்குள் தமிழ்நாடு உள்ளது.

இந்தத் தோல்விகளுக்காக மட்டுமாவது, போலீஸ் துறையை தன் நேரடிப் பொறுப்பில் வைத்துள்ள முதலமைச்சர் பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைக்குப் பிறகாவது, அ.தி.மு.க. அமைச்சர்களின் தலையீடு இன்றி - முதலமைச்சர் அலுவலகத்தின் அரசியல் உத்தரவுகளுக்கு அடிபணியாமல், தமிழகக் காவல் துறை சுதந்திரமாகச் செயல்படுவதற்கு முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுத்து, தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading கொலை மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 6வது இடம்.. ஸ்டாலின் கடும் விமர்சனம்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை