கிரிக்கெட் போர்டு தலைவராக கங்குலி பொறுப்பேற்பு.. அமித்ஷா மகன் செயலாளரானார்..

by எஸ். எம். கணபதி, Oct 23, 2019, 13:11 PM IST

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக(பி.சி.சி.ஐ) முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்றார். அவருடன் அமித்ஷா மகன் ஜெய்ஷா, போர்டு செயலாளராக பொறுப்பேற்றார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு கடந்த 14ம் தேதி தொடங்கியது. தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பொருளாளர் பதவிக்கு மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்குர் மகன் அருண் துமால் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த தேர்தலில் முன்னாள் தலைவர் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் ஆதரவுடன் கங்குலி டீம், முன்கூட்டியே உறுப்பினர்களிடையே லாபி செய்தது. இதனால், போர்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறாமல் ஏகமனதாகவே அனைவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதன்படி, புதிய தலைவராக கங்குலி இன்று பொறுப்பேற்று கொண்டார். மும்பை வான்கடே ஸ்டேடிய வளாகத்தில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றார். அவருடன் ஜெய்ஷா, அருண் துமால் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர். கங்குலியிடம் பிசிசிஐ தேர்தல் அதிகாரியான முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி பொறுப்புகளை வழங்கினார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி பாப்டே பெஞ்ச் உத்தரவுப்படி, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றதும் ஏற்கனவே நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு விலகிக் கொண்டது.


Leave a reply