அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்..

Congress leader Chidambram has moved a bail plea in Delhi High Court

by எஸ். எம். கணபதி, Oct 23, 2019, 12:44 PM IST

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள ப.சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடு வந்த விவகாரத்தில் முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த முதலீடு அனுமதி விவகாரத்தில் சட்டவிரோதப் பணபரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி, அமலாக்கத் துறையும் அவர்கள் மீது தனியாக வழக்கு பதிவு செய்துள்ளது. சிபிஐ வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் செப்.5ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம், டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தன. அதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பானுமதி பெஞ்ச், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்தார். அதே சமயம், வேறு வழக்கில் அவர் தேவைப்படாதபட்சத்தில் அவரை விடுவிக்கலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால், அமலாக்கத் துறையினர் தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரம் தற்போது அந்த துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது காவல் நாளையுடன்(அக்.24) முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்படலாம்.

இந்நிலையில், சிதம்பரம் தனக்கு அமலாக்கத் துறை வழக்கிலும் ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தன்னை களங்கப்படுத்துவதற்காக உள்நோக்கத்துடன் இந்த வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்றும் தன்னை சிறையிலேயே வைத்து பழிவாங்கவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் மனுவில்கூறியிருக்கிறார். இம்மனு நாளை விசாரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

You'r reading அமலாக்கத் துறை வழக்கில் சிதம்பரம் ஜாமீன் மனு தாக்கல்.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை