பேனருக்கு பதிலாக அரசு பெண்கள் பள்ளியில் சிசிடிவி கேமராக்கள்... பிகிலுக்காக விஜய் ரசிகர்கள் புதுயுக்தி...

by Chandru, Oct 23, 2019, 16:30 PM IST

வரும் தீபாவளியையொட்டி நாளை மறுதினம் 25ம் தேதி விஜய்யின் பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தனது படங்களுக்கு பேனர் வைக்க வேண்டாம் என்று ஏற்கனவே பிகில் ஆடியோ வெளியீட்டின்போது விஜய் அறிவித்திருந்தார். அதை ரசிகர்கள் கடைபிடிக்கத் தொடங்கி உள்ளனர். பிகில் பட பேனருக்கு பதிலாக அரசு பள்ளியில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

நெல்லை மாவட்ட விஜய் ரசிகர்கள், கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு பதிலாக நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி மற்றும் மானிட்டர்களை காவல்துறை அதிகாரியின் ஆலோசனையின் பேரில் அமைத்து கொடுத்துள்ளனர். விஜய் ரசிகர்களின் இந்த பணியை போலீஸ் அதிகாரிகள் பாரட்டினர்.

சென்னையில் சமீபத்தில் அரசியல்வாதி ஒருவர் வைத்த விளம்பர பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்து பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார். இந்த சம்பவத்தால் பேனர் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலர் கேட்டுக்கொண்டனர்.

சூர்யாவின் காப்பான் படம் வெளியானபோது அவரது ரசிகர்கள் இலவசமாக தலைக்கவசத்தை வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர். அசுரன் திரைப்படம் வெளியானபோது தனுஷ் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply