தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம்.. திமுக கூட்டத்தில் தீர்மானம்..

by எஸ். எம். கணபதி, Nov 11, 2019, 13:22 PM IST

அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் குறித்தும், அதற்கு துணை போகும் பாஜக அரசு குறித்தும் தமிழகம் முழுவதும் திண்ணைப் பிரச்சாரம் மற்றும் கூட்டங்கள் நடத்திட திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக பொதுக்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதான அரங்கில் நேற்று(நவ.10) நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று காலை, கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தமிழக வரலாற்றின் இருண்ட காலம் என்று சொல்லுமளவுக்கு, பகல் கொள்ளை - உளுத்துப் போன ஊழல் - எதற்கும் லஞ்சம் - எங்கும் கமிஷன் என்று அவமானகரமான ஆட்சி ஒன்றை நடத்தி வரும் அதிமுக அரசையும் மற்றும் அதற்கு அனைத்து வகையிலும் பலத்த பாதுகாப்பு அளித்துவரும் மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள், திமுக பொதுக் குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

அந்தத் தீர்மானங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று விளக்கிட, நவம்பர் 16ம் தேதி, தமிழகம் முழுவதும் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்திட மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.

குறிப்பாக, ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் அதிமுக ஆட்சி, அதிமுக அமைச்சர்களின் மீதான வருமான வரித்துறை ரெய்டு, விசாரணை நடவடிக்கைகளில் இருந்து காப்பாற்றும் மத்திய பாஜக அரசு, மத்திய பாஜக அரசின் தமிழக விரோத திட்டங்களுக்கு துணைபோகும் அதிமுக அரசு ஆகிய தீர்மானங்களை, மக்கள் மனங்களில் ஆழப் பதிந்திடும் வண்ணம், துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, தமிழகம் முழுவதும் ஊர்கள்தோறும் விநியோகித்திட வேண்டும்.

மேலும், தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரச்சாரங்கள் மேற்கொள்வதென்றும் மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


More Politics News