ஐதராபாத் கச்சேகுடா ரயில் நிலையம் அருகே ஒரே தண்டவாளத்தில் சென்ற 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால், உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. 6 பயணிகள் மட்டும் காயமடைந்தனர்.
ஐதராபாத் கச்சேகுடா ரயில் நிலையத்தை நோக்கி கர்னூலில் இருந்து இன்டர்சிட்டி ரயில் வந்து கொண்டிருந்தது. காலை 10.30 மணிக்கு ரயில் நிலையத்திற்கு அருகே அந்த ரயில் வந்து கொண்டிருந்த போது, ரயில் நிலையத்தில் இருந்து சென்ற உள்ளூர் ரயில் அதே தண்டவாளத்தில் எதிரே சென்றது. இரு ரயில்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி விட்டன.
ரயில் நிலையத்திற்குள் வருவதால் இன்டர்சிட்டி ரயில் மெதுவாக வந்துள்ளது. அதே போல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயிலும் மிதமான வேகத்தில்தான் சென்றிருக்கிறது. அதனால், மோதலில் ரயில் பெட்டிகள் சேதம் அடைந்த போதும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. 6 பேர் மட்டும் பலத்த காயமடைந்துள்ளனர்.
ரயில்கள் மோதியதும் ஏற்பட்ட பலமான சத்தத்தால், பயணிகள் மிரட்சியில் அலறியடித்து ரயிலில் இருந்து குதித்து ஓடினர். சில நிமிடங்களுக்கு பிறகுதான் அங்கு அமைதி ஏற்பட்டது.
ரயில்களுக்கான சிக்னலில் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டிருக்கிறது. ரயில்வே ஊழியர்களின் கவனக்குறைவு காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ரயில் விபத்து குறித்து கேள்விப்பட்ட ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், உடனடியாக பயணிகளுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.