உத்தவ் தாக்கரேயுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு.. சிவசேனா ஆட்சி உறுதி?

by எஸ். எம். கணபதி, Nov 11, 2019, 13:38 PM IST
Share Tweet Whatsapp

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசியுள்ளார். இதனால், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சியமைப்பது உறுதி என மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்று சிவசேனா பிடிவாதமாக கேட்டது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது.

இந்த இழுபறியில், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பட்நாவிஸை பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். அவர் கவர்னரை சந்தித்து பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார்.

இதன்பின், 2வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனாவுக்கு தேசியவாதகாங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளிக்கலாம் என தெரிகிறது. அதற்கு அக்கட்சிகள் விதித்த நிபந்தனை, மத்திய அரசில் இருந்து சிவசேனா விலகி, பாஜக கூட்டணியை முறிக்க வேண்டுமென்பதுதான். இதையடுத்து, சிவசேனாவின் ஒரே மத்திய அமைச்சரான கனரகத் தொழில்துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் பதவி விலகுவதாக இன்று அறிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதே சமயத்தில் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டில் அகமது படேல், கே.சி.வேணுகோபால், கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆலோசித்தனர். பின்னர், மாலை 4 மணிக்கு மகாராஷ்டிர காங்கிரஸ் முக்கிய தலைவர்களை டெல்லிக்கு அழைத்து ஆலோசித்து இறுதி முடிவெடுப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். இதனால், இந்த சந்திப்பை அடுத்து மும்பையில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. கவர்னர் விதித்த இரவு 7.30 மணி கெடுவுக்குள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டு விடுமா என்ற பரபரப்பு காணப்படுகிறது.


Leave a reply