மத்திய அரசை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்.. அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

Dmk insists to pass resolution against centre in Assembly.

by எஸ். எம். கணபதி, Sep 15, 2020, 13:03 PM IST

நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு அ.தி.மு.க. அரசு எங்களிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கண்டித்தும், சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பேசியதாவது:
அண்ணாவின் 112வது பிறந்தநாள் இன்று. இதே சட்டமன்றத்தில் இருமொழிக் கொள்கையை, மாநில சுயாட்சியைத் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அந்த தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றிய தலைவர் அண்ணா. அந்த தீர்மானங்களுக்கு தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில் நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டுமென அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.


அரியலூர் அனிதா முதல் இன்று திருச்செங்கோடு மோதிலால் வரை, பல மாணவ மாணவிகள் "நீட்" தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென அனைவருமே தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வருகிறோம்.இதே பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக - மாணவச் செல்வங்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு அளிக்கக் கோரி இந்த அவையில் இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் அனுமதிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் இந்த அவையின் உணர்வுகளை மத்திய அரசு கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அனுப்பிய மசோதாக்களுக்கும் இதுவரை ஒப்புதல் வாங்கிடவில்லை.


செப்டம்பர் 12-ம் தேதி, "நீட்" தேர்வுக்கு முதல் நாள் மட்டும் - ஒரே நாளில் மதுரை ஜோதி ஸ்ரீதுர்கா, தர்மபுரி ஆதித்யா, திருச்செங்கோடு மோதிலால் என மூன்று மாணவ - மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ஐயாம் சாரி, ஐயாம் டயர்ட் என்ற மதுரையில் தற்கொலை செய்து கொண்ட மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின்- ஆடியோ, ஒட்டுமொத்த தமிழக “மாணவர்களின் வாய்ஸ்” என்பதை மத்திய அரசு ஏற்க மறுக்கிறது.
இதற்கிடையில் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் எண்ணிப் பார்க்க முடியாத அடக்குமுறைகள், கெடுபிடிகள் நடந்திருக்கிறது. புதுமணத் தம்பதியின் தாலியைக் கழற்றி வைத்து விட்டுத் தேர்வு எழுதுங்கள் என்ற கொடுமை நெல்லையில் நடைபெற்றுள்ளது.


பசிக் கொடுமையால் மாணவிகள் மயங்கி விழுந்துள்ளார்கள். அடிப்படை வசதிகள் இன்றி பெற்றோரும், தேர்வு எழுதப் போன மாணவர்களும் தவித்துள்ளார்கள். இந்தி வழிகாட்டுதல்கள்- மதுரை தேர்வு மையங்களில் தலைதூக்கி - தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழுக்குப் பதில் ஆங்கிலக் கேள்வித்தாள் கொடுத்து சில மையங்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


கொரோனா காலத்தில் இப்படியொரு கொடுமையான நீட் தேர்வு தேவையா? ஆகவே தமிழகச் சட்டமன்றத்தையும் - தமிழக மாணவர்களின் உணர்வுகளையும் மதிக்காத - நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யாத மத்திய அரசை எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்யுமாறு அ.தி.மு.க. அரசு எங்களிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை கண்டித்தும் கண்டனத் தீர்மானம் இங்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


பிளஸ்-டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வியில் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு திமுக உறுதுணயாக இருக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

You'r reading மத்திய அரசை கண்டித்து சட்டசபையில் தீர்மானம்.. அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Politics News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை