நடிகர் சூர்யா சொன்னது உண்மைதானே. அவமதிப்புக்கு எங்கே இடம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார்.
நடிகர் சூர்யா ஏற்கனவே நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருந்தார். தற்போது 3 பேர் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்த நிலையில், மீண்டும் காட்டமாக ஒரு அறிக்கையை சூர்யா வெளியிட்டார். அதில், கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது. தேர்வு பயத்தில் மாணவர் தற்கொலை என்ற செய்தி, அதிகபட்சம் ஊடகங்களில் அன்றைக்கான விவாதப் பொருளாக மாறுகிறது. இறந்து போன மாணவர்களின் மரண வாக்குமூலத்தில் கூட எழுத்துப் பிழைகளை கண்டுபிடிக்கும் சாணக்கியர்கள். அனல் பறக்க விவாதிப்பார்கள் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, சூர்யா நீதிமன்றத்தை அவமதிப்பது போல் அறிக்கை விட்டிருப்பதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். உடனே, முன்னாள் நீதிபதிகள் சந்துரு, கே.என்.பாஷா உள்பட 6 பேர் சேர்ந்து தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் சூர்யா மீது அவமதிப்பு வழக்கு எடுக்கக் கூடாது என்று கோரியிருந்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு: நீட் தேர்வின் ஆபத்து குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து, மாணவர்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடு. அரசும், நீதிமன்றங்களும் என்ன செய்கின்றனவோ அதைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் அவமதிப்புக்கு இடம் எங்கே வந்தது? வீடியோ கான்பிரன்சிங் விசாரணை நடப்பது உண்மைதானே?
கொரோனா காலத்திலும் நீட் தேர்வுகள் நடத்துமாறு தீர்ப்புச் சொல்லப்பட்டதும் உண்மைதானே? மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு, மாணவர்களை பலியெடுத்துக் கொண்டுள்ளது. நீதிமன்றங்களும் அதற்கு ஒத்துப் போகலாமா? நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதை விட்டுவிட்டு, விமர்சனங்களை முடக்கும் போக்கு ஆபத்தானது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிப்பதாகும்.
இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.