அதிமுக முதல்வர் வேட்பாளர்.. ஓ.பி.எஸ். முடிவு என்ன.. ட்விட்டரில் கருத்து..

O.Pannirselvam tweets about his decision on Admk C.M. candidate.

by எஸ். எம். கணபதி, Oct 5, 2020, 13:53 PM IST

அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு எனது முடிவு இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று அதிமுக கட்சி 2 ஆக உடைந்தது. தர்மயுத்தம், கூவத்தூர் ஆட்டம், காலில் விழுதல் போன்ற பல காட்சிகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இதன்பின், ஒரு சமரச உடன்பாட்டில் இரு அணிகளும் இணைந்தன. அதன்படி, கட்சிக்கு தலைமையாக ஓ.பி.எஸ், ஆட்சிக்கு தலைமையாக இ.பி.எஸ். என்று முடிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இருவரும் ஒன்று சேர்ந்தே அனைத்து முடிவுகளையும் மேற்கொண்டனர்.


சில மாதங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே கட்சியிலும், ஆட்சியிலும் கோலோச்சத் தொடங்கினார். ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை வளைத்தார் அல்லது ஓரங்கட்டினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை மீண்டும் அறிவிக்க வேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையொட்டி கூட்டப்பட்ட செயற்கழுவிலும் அவருக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் இதை ஏற்றுக் கொள்ளாததால், அது பற்றி முடிவெடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது.


எனினும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை எடப்பாடியும். ஓ.பி.எஸ்.சும் சேர்ந்து அக்.7ம் தேதி அறிவிப்பார்கள் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்திருந்தார். இதற்கிடையே, ஏற்கனவே அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அ.தி.மு.க. கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.


இந்த சூழலில், தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் அங்கு தனது ஆதரவாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். மேலும், அவரது ஆதரவாளர்கள் அவரை வருங்கால முதல்வர் என்று அழைத்து கோஷம் எழுப்பி வருகின்றனர். இன்று(அக்.5ம்தேதி) காலையில் கூட தேனியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்ற போது, வருங்கால முதல்வரே வருக, வருக... என்று நீளமான பேனர்களை வைத்திருந்தனர்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!
இவ்வாறு கூறியிருக்கிறார்.


இதன்மூலம், ஓ.பி.எஸ். ஒரு முடிவுக்கு வந்து விட்டதையே இது காட்டுகிறது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு அவர் ஒப்புதல் அளித்திருக்கலாம். அதே போல், ஓ.பி.எஸ். வலியுறுத்தியது போல் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புதல் அளித்திருக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.


ஒரு வேளை எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக்க ஓ.பி.எஸ். ஒப்புக் கொள்ள மறுத்து, அதையும் மீறி எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஓ.பி.எஸ். மீண்டும் தனியாக பிரிந்து செல்லவும் வாய்ப்பு உள்ளது

More Politics News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை