திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தாக்க அதிமுகவினர் சதி திட்டம் தீட்டியிருப்பார்களோ என்று சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று(ஜன.23) வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:திமுகவினர் வெளியில் நடமாட முடியாது, மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி கடும் எச்சரிக்கை என்று தலைப்பிட்டு, சென்னை திருப்போரூரில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சை ஒரு மாலை நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.முதலமைச்சர் பழனிசாமி சாதாரணமாக பொது மேடையில் பேசும் சவடால் என்று இதைக் கடந்து போய் விட முடியாது.
பழனிசாமி கூட்டம் எத்தகைய பஞ்சமா பாதகங்களுக்கும் அஞ்சாத கூட்டம் என்பதற்குப் பழைய தடபதிவுகளே சான்றாக விளங்கும். எடப்பாடியில் அவர் சண்டியர் பழனிசாமியாகப் பவனி வந்த கால கட்டங்களில் நடந்த விவகாரங்களைக் கூட இதற்காகத் தேடி அலைய வேண்டியதில்லை.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களை நினைவுபடுத்தினாலே போதும். பிரபல புலனாய்வு பத்திரிகையான தெஹல்கா ஏட்டின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோவை யாரும் மறந்திருக்க முடியாது. அதைப் பத்திரிகைகள் பரபரப்பு செய்திகளாக வெளியிட்டனர்.
கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த மர்ம மரணங்களுக்குப் பின்புலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது என்று விகடன் வெளியிட்ட பதிவு இன்னும் கூகுளில் இருக்கிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் பதிவில், பல மாதங்களாக வாய் திறக்க மறுத்து வந்த சயான் தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில் இந்த சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் இருக்கிறார் எனக் கூறியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய தடப்பதிவுகளை(டிராக் ரிகார்டு) கொண்டவர் பழனிசாமி என்பதால் அவரது பேச்சை வழக்கமான மேடைப் பேச்சு என்று புறந்தள்ளி விட முடியாது. சமீபத்தில் கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்ட மக்கள் கிராமசபை கூட்டத்தில் ஒரு அதிமுக பெண் நிர்வாகி குண்டர்களுடன் வந்து கூட்டத்தின் முன்னால் அமர்ந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்திய சம்பவம் கூட எடப்பாடி பேசியதற்கான முன்னோட்டமோ என எண்ணத் தோன்றுகிறது.
அந்த அதிமுக பெண் கூட்டத்தில் வெளியேற்றப்பட்டதும் அமைச்சர் வேலுமணியிடம் போனில் பேசும் வீடியோ காட்சிகளும் வெளியே வந்தன. நன்றாக எந்த காயமும் இல்லாமல் அந்த பெண் பேசும் காட்சிகளும் அதற்குப் பிறகு அவரை மருத்துவமனையில் போய் வேலுமணி பார்த்த காட்சிகளும் வெளிவந்தன. இதையெல்லாம் பார்க்கும் போது பின்னணியில் ஏதோ திட்டமிட்ட சதி இருக்குமோ என எண்ணிடத் தோன்றுகிறது.முதலமைச்சருக்கு ஒன்று மட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். இது போன்ற மிரட்டலுக்குப் பயந்திட திமுக, கோழைகளின் கூடாரம் அல்ல. கொள்கை மறவர்களின் மாடி வீடு. இனிமேல் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டங்களிலோ, பிரச்சாரக் கூட்டங்களிலோ திமுக தலைவர் மற்றும் முன்னணியினருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு முதலமைச்சர் பழனிசாமியே பொறுப்பு என்று எச்சரிக்கை விடுக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.