உங்கள் தொகுதியில்.. ஸ்டாலின் 2ம் கட்ட பிரசாரம் தொடங்கியது..

by எஸ். எம். கணபதி, Jan 29, 2021, 16:37 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் தனது அடுத்த கட்ட பிரச்சாரமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக கிராம சபைக் கூட்டங்களை நடத்தினார். அடுத்தகட்டமாக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின்.. என்ற பிரச்சார பயணத்தை தொடங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரச்சாரப் சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார்.அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்று, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், நிகழ்ச்சியின் நிறைவாக ஸ்டாலின் பேசியதாவது: நான் மக்களுக்கு 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியைத் திருவண்ணாமலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் கவலைகளை, உங்களது கோரிக்கைகளை, உங்களது எதிர்பார்ப்புகளை, என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள்.

இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன். கடந்த 25ம் தேதி காலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களின் முன்னால் நான் ஒரு சபதம் எடுத்தேன். “மு.க.ஸ்டாலின் ஆகிய நான், தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி. எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு”. இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளித்த உறுதிமொழி. அந்த உறுதிமொழியின்படி அமைக்கப்பட்ட முதல் நிகழ்ச்சியை திருவண்ணாமலையில் இருந்து தொடங்கி இருக்கிறேன். 14 வயதில் தமிழ்க்கொடி ஏந்தி திருவாரூர் மண்ணில் தமிழ்காக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட கலைஞர் தான், 95 வயது வரைக்கும் இந்த தாய்த்தமிழ் நாட்டுக்காக அயராது உழைத்த வாழ்நாள் போராளி! போராளி மட்டுமல்ல - மிகச்சிறந்த நிர்வாகி.

அவரால் உருவாக்கப்பட்ட மாநிலம் தான் இந்த தமிழ்நாடு. அத்தகைய தலைவர் தான் “சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்! - என்று சொன்னார். அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான்! செய்வதைத் தான் சொல்வான்! தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்! தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி இடஒதுக்கீடு தரப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்! தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 7000 கோடி விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்! தி.மு.க. ஆட்சி அமைந்ததும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்படும் என்று சொன்னார் கலைஞர்! செய்தார் கலைஞர்! அத்தகைய கலைஞரின் மகன் நான். நானும் வாக்குறுதி அளிக்கிறேன்! 100 நாட்களில் உங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்! 14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை ஆரம்பித்து மக்கள் பணியாற்றத் தொடங்கியவன் நான்.

இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் தமிழகத்தில் என் கால் படாத கிராமங்களே இல்லை. பயணம் செல்லாத நகரங்களே இல்லை! இந்த அரை நூற்றாண்டு காலத்தை தமிழ்நாட்டு மக்களோடு கழித்தவன் நான். அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்தவன் நான். சென்னை மாநகரத்தின் மேயராக நான் 1996-ம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். மேயர் என்கிற முறையில் என்னுடைய உரையைத் தயார் செய்து, முதலமைச்சரிடத்தில் காண்பித்தேன். மேயர் பதவி என்று நான் குறிப்பிட்டு இருந்தேன். அதை அடித்துவிட்டு, மேயர் பொறுப்பு என்று மாற்றி எழுதித் தந்தார் கலைஞர் அவர்கள். இது பதவி இல்லை, பொறுப்பு. பொறுப்பை உணர்ந்து நடந்துக்கோ என்று சொன்னார் கலைஞர் அவர்கள். மேயராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும், துணை முதல்வராக இருந்தாலும், இன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் - இதைப் பதவியாக இல்லாமல் பொறுப்பாக உணர்ந்து செயல்படும் பக்குவத்தை நான் பெறுவதற்கு அண்ணா போட்ட அடித்தளம் - கலைஞர் ஊட்டிய உணர்வுதான் காரணம்! எங்கே சென்றாலும், ஏற்கனவே நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாகப் பயன்பெற்ற பெண்களை அதிகமாக பார்க்க முடிகிறது.


இராமநாதபுரம் கூட்டுக்குடி நீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், சென்னையில் எழுந்து நிற்கும் பாலங்கள், தமிழகம் முழுவதும் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், விவசாயிகளுக்கு தலவரி - தலமேல் வரியை ரத்து, குளம், குட்டைகளை தூர் வாரியது, ஊரகப்பகுதி மக்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தது, நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தொழில் துறையைக் கவனித்தபோது சென்னையைச் சுற்றிலும் உருவாக்கப்பட்ட ஏராளமான தொழிற்சாலைகள் - ஆகியவை இன்றைக்கும் எனது பெயரைச் சொல்லும்! கடந்த பத்து ஆண்டு காலத்தில் தமிழகம் எல்லாத் துறையிலும் எல்லா வகையிலும் அதலபாதாளத்துக்கு போய்விட்டது. இந்த அ.தி.மு.க. ஆட்சியில் எந்த தரப்பு மக்களுக்கும் நிம்மதியாக இல்லை. எந்தத் தொகுதிக்கும் எந்த புதிய திட்டங்களும் இல்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் தொகுதிகள் கூட கேவலமாக இருக்கின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகளை இவர்கள் தங்கள் தொகுதிக்குக் கூடச் செய்து தரவில்லை! மக்கள் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க தி.மு.க.வால் தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களையும் இன்று வழங்கியிருக்கிறீர்கள். மக்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் மக்களை நான் சந்திக்கிறேன்!

திமுக அரசாங்கம்தான் வரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் நீங்கள் கொண்டுவந்த பாரங்களை, இப்போது என் முதுகில் ஏற்றி விட்டீர்கள். என்னை நம்பி ஏற்றி வைத்திருக்கிறீர்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செல்லுங்கள்! திமுக ஆட்சிதான் அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்தக் கோரிக்கையை வைத்துள்ள உங்களுக்கு நான் சொல்வது, கழக ஆட்சி தான் அமையும்! உங்கள் கவலைகள் யாவும் தீரும்! என்ற வாக்குறுதியை மீண்டும் நான் வழங்குகிறேன். உங்களுடைய அனைத்து பிரச்சினைகளும் எனக்கு புரிகிறது. உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் உங்கள் முன்னால் இந்த பெட்டியில் போட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனுடைய சாவி என்னிடம் தான் இருக்கப்போகிறது. இன்னும் 3 அல்லது 4 மாதங்களில் தேர்தல் நடக்கப்போகிறது. தேர்தல் முடிந்து, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று, நான் பதவி பிரமாணம் எடுத்த அடுத்த நாள் இந்தப் பெட்டியை நானே திறப்பேன். இந்த மனுக்கள் அனைத்தும், ஏற்கனவே நான் சொன்னதுபோல, இதற்கென தனி பிரிவு அமைக்கப்பட்டு, இந்த அடிப்படை பிரச்சினைகள் அனைத்தையும் முன்னுரிமைக் கொடுத்துத் தீர்த்து வைப்பேன். கவலைப்படாதீர்கள். நான் கலைஞருடைய மகன் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். நான் கலைஞருடைய மகன். நம்பிக்கையோடு செல்லுங்கள். விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம். இவ்வாறு ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார்.

You'r reading உங்கள் தொகுதியில்.. ஸ்டாலின் 2ம் கட்ட பிரசாரம் தொடங்கியது.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை