ஐபிஎல் திருவிழாவின் 14 வது தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 18 ல் சென்னையில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சில வீரர்கள் அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட விலைக்கே இந்த ஆண்டும் விளையாட வேண்டும் என்ற நிபந்தனையை பிசிசிஐ வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் 13 வது சீசன் பல்வேறு தடைகளை தாண்டி, கொரோனா அரக்கனை வென்றெடுத்து ஐக்கிய அரபு எமிரகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக, மொத்தமாக ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று தனக்கென ஒரு இராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளது. இந்நிலையில் 2021 ம் ஆண்டிற்கான தொடரின் அடிப்படை வேலைகள் அரங்கேறி கொண்டு இருக்கின்றன. வரும் பிப்ரவரி 18 ல் வீரர்கள் ஏலம் முடிந்தவுடன். போட்டி நடைபெறுவதற்கான ஆடுகளங்கள் பற்றிய தகவல்கள் வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் மற்ற சீசன்களை விட கடந்த சீசன் மிக பிரபலமடைய காரணம், டைடில் ஸ்பான்சர்ஷிப்பும் என்பதனை மறைக்க முடியாது.
கடந்த முறை இந்த டைடில் ஸ்பான்சர்ஷிப்பை DREAM 11 வாங்கியது. இவர்களின் விளம்பரம் ஐபிஎல் தொடரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. இதற்கு முந்தைய சீசனை விவோ நிறுவனம் டைடில் ஸ்பான்சர்ஷிப்பை வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. DREAM 11 டைடில் ஸ்பான்சர்ஷிப்பானது கடந்த 31 டிசம்பர் உடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சீசனுக்கான டைடில் ஸ்பான்சர்ஷிப் விவோ அல்லது DREAM11 க்கு செல்லுமா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் இதுபற்றிய இறுதி முடிவை பிசிசிஐ தான் எடுக்கும் என்பதால் வரும் பிப்ரவரி 18 வரை காத்திருந்து தான் ஆக வேண்டும். ஆனால் முக்கிய நபர்களின் கருத்துப்படி இந்தமுறை விவோ க்கு செல்ல இருப்பதாக நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.