பிரபல மலையாள டைரக்டர் மேஜர் ரவி பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவியுள்ளார். கேரள பாஜகவில் உள்ள 90 சதவீதம் தலைவர்களையும் நம்ப முடியாது என்று அவர் கூறியுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி டைரக்டர்களில் ஒருவர் மேஜர் ரவி. இவர் ராணுவத்தில் மேஜராகவும், கமாண்டோ ஆகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ராணுவத்தில் பணிபுரிந்த போதே சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மலையாள படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1980களில் மலையாள படங்களில் ராணுவம் குறித்த கதை தொடர்பாக மலையாள திரைத் துறையினர் இவரிடம் தான் சந்தேகம் கேட்பார்கள். மலையாளத்தில் முதலில் இவர் மேகம் என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். இதன் பின்னர் ஒலிம்பியன் அந்தோணி ஆதம், ஸ்ரத்தா, ஆக்சன் ஹீரோ பிஜு, அனார்கலி, டிரைவிங் லைசென்ஸ் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் கமலின் ஆளவந்தான், லேசா லேசா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். புனர்ஜனி என்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய இவர், மோகன்லால், ஜீவா நடித்த கீர்த்தி சக்ரா, மம்மூட்டி நடித்த மிஷன் 90 டேஸ், குருஷேத்ரா, காந்தகார், கர்மயோதா, ஒரு யாத்ரயில், பிக்கெட் 93, 1971 பியான்ட் பார்டர்ஸ் உள்பட ஏராளமான படங்களை டைரக்டு செய்துள்ளார். கடந்த சில வருடங்களாக இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். கேரளாவில் கடந்த பல தேர்தல்களில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் செய்து வந்தார். இந்நிலையில் இன்று திடீரென அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா நடத்தி வரும் தேர்தல் பிரச்சார யாத்திரையில் இன்று இவர் கலந்து கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கேரள காங்கிரஸ் கட்சித் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரனை சந்தித்து பேசினார். அப்போதே அவர் காங்கிரசில் சேரப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள மேஜர் ரவி கூறியது: கேரளாவில் உள்ள பாஜக தலைவர்களில் 90 சதவீதம் பேரும் நம்ப முடியாதவர்கள். அனைவருக்கும் தலைக்கனம் மிக அதிகம். சாதாரண மக்களின் பிரச்சினை என்ன என்று கூட இவர்களுக்கு தெரியாது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் இவர்கள் கட்சியில் செயல்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.