தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இதில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் அந்நகரில் வசிக்கும் மக்களுக்கு பல நோய்கள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால், அந்த தொழிற்சாலையை மூட வேண்டுமென்று கோரி பெரும் போராட்டங்கள் நடந்தன. கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் ஆலையை திறக்க தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் புதிய மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ``ஸ்டெர்லைட் நிறுவனத்தால் ஆக்சிஜன் உற்பத்தி செய்யமுடியும். அரசு அனுமதி கொடுத்தால் தற்போது இருக்கும் சூழ்நிலை சமாளிக்க ஒருநாளைக்கு ஐநூறு டன் ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக தருகிறோம்" எனக் கூறியிருக்கிறது.
திடீரென ஸ்டெர்லைட் நிறுவனம் இப்படி கோரிக்கை வைக்க வெறும் பின்னணி இருக்கிறது எனக் கூறுகிறது விவரம் அறிந்த வட்டாரங்கள். ஸ்டெர்லைட் கூறியிருப்பதில் பல கார்ப்பரேட் உத்திகள் உள்ளன. அரசு அந்த ஆலையை பலநாட்களாக பூட்டிவைத்துள்ளார்கள். சில மாதங்கள் ஆலையை சர்வீஸ் செய்ய சொல்லி திறக்கச்சொல்லி மனு கொடுத்து அதுவும் கிடப்பில் உள்ளது. இந்த நேரத்தில் தான் ஆக்சிஜன் தயாரித்து தருகிறோம் எனக் கூறி சைக்கிள்கேப்பில் ஆலையை திறந்து பழுதை சரிசெய்யலாம் என்று திட்டமிட்டு இருக்கலாம்.
ஸ்டெர்லைட் ஆலையில் ஒருநாளைக்கு ஐநூறு டன் ஆக்சிஜன் தயாரிக்கும் திறன் உண்மையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அரசை வைத்தே ஆலையை திறக்கவைத்து ஆலையை சரிசெய்தபின் ஆக்சிஜனை தயாரித்து இலவசமாக கொடுத்தபிறகு ஆலையை நிரந்தரமாக செயல்பட காப்பர் உருக்காலை மீண்டும் இயங்க கோரிக்கை வைக்க திட்டமிட்டு இருக்கலாம்" என்று கூறப்படுகிறது.