மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறை வேற்றப்பட்டு விட்டது. ஆனால், மக்களவையில் பல்வேறு காரணங்களால் கடந்த 8 ஆண்டுகளாக இந்த மசோதா நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், அதிகாரமளிப்பது பற்றி தீவிரமாக பிரசாரம் செய்து வரும் பிரதமர் மோடி, மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
"அந்த மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் நிபந்தனையற்ற ஆதரவு தருகிறோம். எந்த விதமான தாமதமும் இல்லாமல், அடுத்த தேர்தலுக்கு இதைப் பயன்படுத்தாமல்,மசோதாவை நிறைவேற்றுங்கள்." என கடிதத்தில் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு பிரதிநிதித்துவத்தை தொடர்ந்து வலியுறுத்திய தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தியிருக்கும் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களின் முயற்சியை வரவேற்பதோடு, மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் அந்த இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற உறுதியளிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.