தமிழக அரசு விளையாட்டு துறையில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக தமிழக இளைஞர் நலன் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஜூனியர் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள அரங்கில் நடந்தது. விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வை தொடக்கி வைத்தார்.
இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த தலையாய வீரர்கள் தேசிய அவர்கள் நாட்டு தேசியக் கொடியை கையில் ஏந்தி அணிவகுப்பாக சென்றனர். நாளை காலை 10 மணிக்கு உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் போட்டி தொடங்குகிறது. இந்த மாதம் 29-ஆம் தேதி போட்டி நிறைவடைகிறது.
தொடக்க விழாவுக்கு பிறகு பேசிய விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, "தமிழக அரசு சார்பில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 50 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது." எனக் கூறினார்.
"கடந்த 1 வருடத்தில் 148 விளையாட்டுகளில் சிறப்பாக விளக்கியவர்களுக்கு 13.5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. 8.9 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் தனி நபர் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு முறையே 1 லட்சம், 75 ஆயிரம்,50 ஆயிரம் என பரிசு தொகை வழங்கப்படுகிறது" என அமைச்சர் தெரிவித்தார்.
"கிராமப்புறங்களில் உள்ள வீரர், வீரங்கானைகளை அடையாளம் காணும் வகையில் 12,524 கிராம பஞ்சாயத்துகளில் 2.55 கோடி ரூபாய் பரிசுகளை உள்ளடக்கிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தாண்டுக்கான கிராமப்புற போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் ஒரு மாதத்தில் அவை நிறைவடையும்" என்றும் அவர் தெரிவித்தார்.