சுழற்சி அடிப்படையில் தினகரன் வீட்டை பாதுகாக்கும் 5 காவலர்கள்!

சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டு முன்பு கார் தீப்பிடித்தன் எதிரொலியாக, அவரது இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

TTV Dinakaran

கடந்த 29ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டில், அமமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி புல்லட் பரிமளம் என்பவர், பெட்ரோல் குண்டு வீசியதாக செய்திகள் வெளியானது. இந்தத் தாக்குதலில் தினகரனின் கார் ஓட்டுநர் பாண்டித்துரை, புகைப்பட கலைஞர் டார்வின் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் என 3 பேர் காயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் புல்லட் பரிமளத்தை சாஸ்திரிநகர் போலீஸார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, டிடிவி தினகரனுக்கும், அவரது வீட்டுக்கும் பாதுகாப்பு கோரி அமமுக அமைப்பு செயலாளர் பழனியப்பன் டிஜிபி அலுவலகத்தில் மனு கொடுத்தார். இதனை தொடர்ந்து தினகரன் இல்லத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சுழற்சி அடிப்படையில் 5 காவலர்கள் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.