செயலிகளால் இயங்கும் கார் நிறுவனங்களான உபேர் (Uber) மற்றும் கேபிஃபை (Cabify)போன்றவற்றுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து ஸ்பெயின் நாட்டு வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 28) முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர்கள் முக்கிய சாலைகள், விமானம், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களை முற்றுகையிட்டுள்ளனர். சாலைகளில் கூடாரம் அமைத்து படுத்திருக்கின்றனர். இதன் காரணமாக பார்ஸிலோனா, மேட்ரிட் உள்ளிட்ட நகரங்களில் பெருங்குழப்பம் நிலவி வருகிறது.
விடிசி எனப்படும் தனியார் கார்கள், வாடகை கார்கள் இவற்றுக்கு இடையேயான விகிதாச்சாரம் மீறப்படுவதாக டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 30:1 என்ற விகிதத்தில் டாக்ஸி மற்றும் விடிசி (VTC) இருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லாமல் அதிக அளவில் தனியார் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பிரதமர் அலுவலகம், ஓட்டுநர் மற்றும் வாகன உரிமை வழங்குவதை மண்டல அரசுகளிடம் பிரித்து கொடுத்து விடுவதாக கூறியுள்ளது. 17 மண்டலங்களுக்கு பிரிக்கும் இந்த நடவடிக்கை, பிரச்னையை தீர்ப்பதற்கு பதில் அதிகமாக்கும் என்று ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.
உபேர் போன்ற செயலி மூலம் இயங்கும் கார் நிறுவனங்களை அனுமதிப்பது, வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்று ஏனைய ஐரோப்பிய நாடுகளிலுள்ள வாடகை கார் ஓட்டுநர்களும் கூறுகின்றனர்.
PC - EL PAÍS
லண்டன் வாடகை கார் ஓட்டுநர்கள், உபேர் நிறுவனத்திற்கு தற்காலிக அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா, இலங்கை, பங்களோதேஷ் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கள் நிறுவனம் 100 கோடி பயண சேவை (trip) செய்துள்ளதாக உபேர் நிறுவனம் கூறியுள்ளது.
கோடைகாலமான இது ஸ்பெயினில் சுற்றுலாவுக்கு ஏற்ற வேளையாகும். சுற்றுலா காலத்தில் நடக்கும் இந்தப் போராட்டம் ஸ்பெயினை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.