டெல்லியில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தில் கத்தியுடன் உலா வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லி வந்தார். ஜந்தர் மந்தர் சாலையில் அமைந்துள்ள கேளர விருந்தினர் இல்லத்தில் அவர் தங்கியுள்ளார்.
அவரிடம் பேட்டி எடுப்பதற்காக ஏராளமான செய்தியாளர்கள் கேரள விருந்தினர் இல்லத்தின் முன் காத்திருந்தனர். அந்த கூட்டத்தில் சந்தேகிக்கும் வகையில் ஒரு நபர் நின்றிருந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அந்த நபரை விசாரிக்க அழைத்துள்ளனர்.
சுதாரித்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு, பினராய் விஜயன் அறையை நோக்கி சென்றுள்ளார். அங்கிருந்த பாதுகாவலர்கள், அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். பினராயி விஜயனை எனது பிரச்சினைகளை தீர்க்கவில்லை. அவரை சந்திக்க அனுமதிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.
அத்துடன், சிறிது நேரம் பாதுகாவலர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தார் அந்த நபர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் டெல்லியில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், “அவரது பெயர் விமல்ராஜ், கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்தவர். அவரது மனநிலை 80 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். இருப்பினும், அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.
பலத்த பாதுகாப்பு கொண்ட பகுதியில் நபர் ஒருவர் கத்தியுடன் புகுந்தது எப்படி என்பது குறித்து டெல்லி காவல்துறை விசாரித்து வருகிறது.