வீட்டில் பிரசவம்... சுகாதாரத்துறை எச்சரிக்கை

வீட்டில் பிரசவம் பார்க்கக் கூடாது சுகாதாரத்துறை எச்சரிக்கை

Aug 4, 2018, 18:51 PM IST

திருப்பூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் யூ-டியூப் வீடியோக்கள் பார்த்து பிரசவம் பார்த்ததில், கிருத்திகா என்ற பெண் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, கடந்த சில தினங்களாக சுகப்பிரசவம் தொடர்பான விவாதங்கள், பிரச்சாரங்கள் சமூக வலைதளத்தில் தீவிரமடைந்துள்ளன.

Pregnant

அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை அடுத்த கோடாங்கிபட்டி கிராமத்தில், கண்ணன் என்பவர் தனது மனைவி மகாலட்சுமிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். மகாலட்சுமி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிக்கை ஒன்று விடுத்துள்ளது. அதில், “இது போன்ற விபரீத முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. வீடியோ பார்த்தோ, திரைப்படங்களை பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். மருத்துவர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்க்க தகுதி பெற்றவர்கள்.

பொதுமக்கள் அரசு மருத்துவமனையின் தாய் நல சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாய்சேய் நலனை காக்கும் கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்." என எச்சரித்துள்ளது.

இதனிடையே, தேனியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “அரசு விதிகளின்படி மருத்துவமனையிலேயே பிரசவம் பார்க்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும், “சட்ட விதிகளை மீறி வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு. இதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

You'r reading வீட்டில் பிரசவம்... சுகாதாரத்துறை எச்சரிக்கை Originally posted on The Subeditor Tamil

More Special article News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை