அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் சத்ருகன் சின்ஹா போட்டியிடக்கூடும் என்று கருதப்படுகிறது.
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவுடன் சத்ருகன் சின்ஹா கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டதையடுத்து இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாள் நினைவு கூட்டம், வியாழக்கிழமை லக்னோவில் சமாஜ்வாடி கட்சியின் தலைமையகத்தில் நடந்தது.
நடிகரும் பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா, முன்பு பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கிய யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் இதில் பங்கு பெற்றனர்.
நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை சத்ருகன் சின்ஹாவும், யஷ்வந்த் சின்ஹாவும் முழுவீச்சில் தாக்கி உரையாற்றினர். "விமான தயாரிப்பில் ஏற்கனவே அனுபவமுள்ள ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தை ரஃபேல் விமான பேரத்தில் சேர்க்காதது ஏன்?" என்று சத்ருகன் சின்ஹா கேள்வி எழுப்பினார்.
"பணமதிப்பழிப்பு பாரதீய ஜனதா கட்சியின் திட்டமல்ல. பணமதிப்பழிப்பும் சரக்கு மற்றும் சேவை வரியாகிய ஜிஎஸ்டியும் ஏழை மக்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன. பாரதீய ஜனதா கட்சியில் இருந்து கொண்டே ஏன் அதை தாக்கி பேசுகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். நான் உண்மையையே பேசுகிறேன். உண்மையை பேசுவது கலகம் செய்வது என்றால், நான் கலகக்காரன்தான்," என்றும் அவர் கூறினார்.
நாட்டில் தற்போது எமர்ஜென்சி என்னும் நெருக்கடி நிலையை காட்டிலும் மோசமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்ட யஷ்வந்த் சின்ஹா, பாரதீய ஜனதாவுக்கு மாற்றுக்கருத்துள்ள அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு மகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
கூட்டத்திற்குப் பின்னர், அகிலேஷ் யாதவ், சத்ருகன் சின்ஹாவையும் யஷ்வந்த் சின்ஹாவையும் தனியறையில் சந்தித்து பேசினார் என்று சமாஜ்வாடி கட்சி வட்டாரங்களிலிருந்து செய்தியாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து சத்ருகன் சின்ஹா, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சமீபத்தில் சத்ருகன் சின்ஹா, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார். ஆனாலும் கட்சி ரீதியாக இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அவரது சொந்த மாநிலமான பீஹாரை அடுத்துள்ள வாரணாசியில் காயாஸ்தாக்கள் என்னும் பிரிவினர் மத்தியில் சத்ருகன் சின்ஹாவுக்கு பெரும் ஆதரவு இருப்பதாக நம்பப்படுகிறது.