இந்தியா வந்துள்ள மேற்கிந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை ஆடி வருகிறது. முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்த மேற்கிந்திய அணி, எப்படியும் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கியது.
ஆனால், வழக்கம் போல அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினர். விக்கெட்டுகள் வரிசையாக விழத் தொடங்கின.
கேப்டன் ஜேசன் ஹோல்டரின் அரைசதம் மற்றும் ராஸ்டன் சேஸின் சதம் மட்டுமே மேற்கிந்திய அணியை 300 ரன்களுக்கு மேல் ஸ்கோர் எடுக்க உதவியது. முதல் நாள் ஆட்டத்தில் 96 ரன்களுடன் களத்தில் இருந்த ராஸ்டன் சேஸ், இரண்டாம் நாள் ஆட்டமான இன்றைய துவக்கத்தில் சதம் விளாசினார்.
மேற்கிந்திய அணியின் நிலை அறிந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஸ்டன் சேஸ், 189 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகள் என 106 ரன்களை எடுத்தார். வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஸ்டனின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இந்திய அணி தவித்து வந்தது.
உமேஷ் யாதவின் அசுர வேக பந்து அவரது விக்கெட்டை பறித்தது. இதனால், இன்று போட்டி தொடங்கிய சற்று நேரத்திலேயே மேற்கிந்திய அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஆதிக்கத்தை செலுத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் ஒரு விக்கெட்டை எடுத்தார். இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது.