சவுதி அரேபி அரசை தீவிரமாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி மாயமாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என துருக்கி அரசு தற்போது சந்தேகம் எழுப்பியுள்ளது. இதற்கு சவுதி அரேபிய அரசு பதிலளிக்குமாறு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்நிலையில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி கொல்லப்பட்டிருந்தால் சவுதி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நாளுக்கு நாள் பல அதிர்ச்சியான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதில் சவுதிதான் ஜமாலை தனது குழுவை அனுப்பிக் கொன்றது என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் துருக்கி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சவுதி மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் உள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கூறும்போது,
பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சவுதி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படும். ஜமால் மாயமானது குறித்து நடக்கும் நிகழ்வுகளை நாங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
ஜமாலை சவுதி கொன்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானவை பொய்யானவை என்று சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.