நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் நீதிமன்றத்தை பற்றி அவதூறாக பேசிய புகாரில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
முன்னதாக புதுக்கோட்டை மாவட்டம் மெய்யப்புரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதியில் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதையும் மீறி விநாயகர் சிலையை எடுத்துச் செல்வோம் என ஹெச்.ராஜா கூற அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த ஹெச்.ராஜா உயர் நீதிமன்றத்தையும், காவல் அதிகாரிகளையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 17ம் தேதி பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. நீதிபதி சி.டி.செல்வம் தலைமையிலான அமர்வு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இதில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா 4 வாரத்தில் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கில் தன்னை பற்றி விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிய ஹெச்.ராஜா "உணர்ச்சிவசப்பட்டு வாய் தவறி பேசியதற்கு நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறேன்" என்றார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.