சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலை பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கே.மோரூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு திட்ட சமையல் உதவியாளராக அதேபகுதியை சேர்ந்த ஜோதி பணியாற்றி வந்தார். அவருக்கு பதவி உயர்வு கிடைத்ததை தொடர்ந்து, அருகிலுள்ள குப்பன் கொட்டாய் அரசு துவக்கப்பள்ளிக்கு சமையலராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே ஜோதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் சத்துணவு சமைத்தல் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று மாணவர்களின் பெற்றோர்கள் எச்சரித்துள்ளனர். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தியது.
இதனை தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் உட்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நான்குபேரை கைது செய்தனர். தலைமை ஆசிரியர் உட்பட இருவர் தலைமறைவாக உள்ளனர். இதில், பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால், அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். தலைமை ஆசிரியர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை கல்வித்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படாததால் பணியிடை நீக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மருத்துவ விடுப்பு கேட்டு உதவி ஆசிரியர் ஒருவர் மூலம் தலைமை ஆசிரியர் சேகர் விண்ணபித்துள்ளார். இதனை கல்வித்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது. மேலும், கைது மற்றும் பணியிடை நீக்கத்தில் இருந்து தப்பிக்க ஆசிரியர் சங்கங்கள் மூலமாக தலைமை ஆசிரயர் சேகர் முயற்சிகள் மேற்கொள்வதாக கூறப்படுகிறது.