ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்று காலை முதல் சர்வர் வேலை செய்யாத காரணத்தால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவனமனை ஆசியாவிலேயே மிக பெரிய மருத்துவமனை என்ற பெருமை கொண்டது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்ட தலைநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஒரு கட்டத்தில் மேல் சிகிச்சை தேவைப்பட்டால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை அணுகுவார்கள்.
அதுமட்டுமல்லாமல் சாதாரண மக்கள் உடல் அளவில் பெரிதும் பாதிக்கப்படும் போது குறைவான செலவில் தேவையான தரமான சிகிச்சை எடுத்துக்கொள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வருவார்கள்.
இன்னும் அவரச சிகிச்சை பிரிவில் சேர்க்கக்கூடிய அளவிற்கு மிகவும் ஆபத்தான நிலையில் கூட அரசு மருத்துவமனை வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் சுமார் ஐந்து மணி நேரம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சர்வர் வேலை செய்யாததால் சிகிச்சை பெற வந்த மக்கள் பெரும் அவஸ்தை அனுபவித்து வந்தனர்.
இந்த ஐந்து மணி நேரத்தில் நோயாளிகள் யாருக்கும் அட்மிஷன் போடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டதால் மக்கள் நீண்ட வரிசையில காத்திருந்தனர். அதன்பின் ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பிறகு சர்வர் வேலை செய்ய தொடங்கி உள்ளது. அரசு மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால் பாமர மக்கள் எங்கு செல்வார்கள்.