கர்நாடகாவில் விடுதலைப் போராட்ட வீரர் திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து வீரச் சமர் புரிந்தவர் திப்பு சுல்தான். அதே நேரத்தில் திப்பு சுல்தான் இந்து கோவில்களை இடித்தார்; கொதவா இன மக்களை அழித்தொழித்தார் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக கர்நாடகா அரசின் திப்பு ஜெயந்திக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு திப்பு ஜெயந்தியை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து பெரும் வன்முறையே கர்நாடகாவில் வெடித்தது.
இந்நிலையில் இன்று குடகு மாவட்டம் மடிகேரியில் திப்பு சுல்தான் ஜெயந்தியை அரசு நடத்தி வருகிறது. இதற்கு எதிராக இந்துத்துவா அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும் திப்பு ஜெயந்திக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 144 தடை உத்தரவை மீறி நடைபெறும் இப்போராட்டங்களில் பங்கேற்றோரை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனால் குடகு மாவட்டத்தில் பதற்றம் நிலவி வருகிறது.