மேற்கிந்தியாவில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
மகளிருக்கான 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நேற்று துவங்கியது. முதல் போட்டியில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தொடக்க வீராங்கனைகளான விக்கெட் கீப்பர் தானியா பாட்டியா 9 ரன்களுக்கு அவுட்டானார். நட்சத்திர வீராங்கனையான மந்தனா 2 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அறிமுக வீராங்கனை ஹேமலதாவும் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் இந்திய அணி மோசமான நிலையில் இருந்தது.
இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் பலமான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 45 பந்துகளில் 7 பவுண்டரிகள் விளாசி 59 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் நியூசிலாந்து வீராங்கனைகளின் பந்துகளை சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளாக விளாசி தள்ளிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், 49 பந்துகளில் சதமடித்து புதிய சாதனையை படைத்தார். இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை மற்றும் டி20 உலககோப்பையில் சதமடித்த 3வது சர்வதேச வீராங்கனை என்ற சாதனைகளையும் படைத்தார்.
மொத்தம் 51 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் விளாசிய ஹர்மன் ப்ரீத் கவுர் 103 ரன்களுக்கு அவுட்டானார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் என்ற வலுவான நிலையை அடைந்தது.
195 ரன்கள் என்ற இமாலய சாதனையை எட்ட முடியாமல் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 160 ரன்களுக்கு நியூசிலாந்து அணி சுருண்டது. அந்த அணியில் சுசி பேட்ஸ் மட்டும் பொறுப்பாக ஆடி 67 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன் மூலம் 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. சுழற்பந்து வீச்சாளர்கள் ஹேமலதா, பூனம் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்து இந்திய அணி வெற்றி பெற வழிவகை செய்தனர்.
இந்திய அணி நாளை பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நிச்சயம் பரபரப்பாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.