கீழடியில் தோண்டப்பட்ட குழிகள் மூடல்...!

கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வு பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து குழிகளை மூடும் பணி தொடங்கியது .

by Balaji, Nov 5, 2020, 16:52 PM IST

தமிழக தொல்லியல் துறை சிவகங்கை மாவட்டம் கீழடியில் 40 லட்ச ரூபாய் செலவில் ஆறாவது கட்ட அகழாய்வைக் கடந்த பிப்ரவரி 19ம் தேதி தொடங்கியது. தமிழக தொல்லியல் துறை இயக்குனர் சிவானந்தம் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டனர். கீழடியில் 20 குழிகள் தோண்டப்பட்டு ஆயிரத்து 400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்புக் கூடுகளும், அகரத்தில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு ஆயிரத்து 20 பொருட்களும், மணலூரில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு 39 பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. அகழாய்வின் போது குழந்தைகளின் எலும்பு கூடுகள், மண்டை ஓடுகள், முதுமக்கள் தாழிகள், இணைப்பு பானைகள், பானை ஓடுகள், கருப்பு சிவப்பு பானைகள், தரைதளம் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டது .

பிப்ரவரியில் தொடங்கிய பணிகள் செப்டம்பரில் முடிவடைந்தது. எனினும் மழை காரணமாக ஆவணப்படுத்தும் பணிகள் மட்டும் நடந்து வந்தன. தற்போது எல்லா பணிகளும் நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் அகழாய்விற்காகத் தோண்டப்பட்ட குழி களை மூடும் பணிகள் இன்று முதல் நடந்து வருகிறது.

கீழடியில் கண்டறியப்பட்ட செங்கல் கட்டிடத் தரை தளம் , தமிழகத்திலேயே மிகப் பெரிய 32 அடுக்குகள் கொண்ட உறைக் கிணறு, இணைப்பு குழாய் பானைகள் ஆகியவை ஆவணப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் தார்ப் பாயால் மூடப்பட்டு மீண்டும் தேவைப்படின் கண்டறியும் வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

You'r reading கீழடியில் தோண்டப்பட்ட குழிகள் மூடல்...! Originally posted on The Subeditor Tamil

More Sivagangai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை