சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் : குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி

by Balaji, Dec 11, 2020, 17:27 PM IST

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் 4 முறை ஒத்தி வைத்து 5வது முறையாக இன்று நடந்தது. இதில் குலுக்கல் முறையில் அதிமுகவை சேர்ந்தவர்கள் தலைவர், துணைத் தலைவராக வெற்றி பெற்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக திமுக தலா 8 இடங்களைப் பிடித்து சம பலத்தில் இருந்தது.

மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஜனவரி 11,ஜனவரி 30, மார்ச் 4 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. மூன்று முறை நடந்த தேர்தலிலும் அதிமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தொடர்ந்து தேர்தலைப் புறக்கணித்தனர். இதனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் இல்லாத நிலையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது .

இதன்பின்னர் கொரோனா பரவல் காரணமாக நீண்ட நாட்களாகத் தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது. திமுகவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து டிச.4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் எனத் தமிழகத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.4 ந் தேதி சிவகங்கையில் முதல்வர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடந்ததால் டிசம்பர்.11-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று பரபரப்பான சூழலில் தேர்தல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. முன்னதாக திமுக உறுப்பினர்கள் 8 பேரும் அதன் பின் அதிமுக உறுப்பினர்கள் 8 பேரும் வந்தனர்.மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தேர்தலை நடத்தினார்.சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் திமுக சார்பில் செந்தில்குமாரும், அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கரன் ஆகிய இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வாக்குப் பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டதில் இருவருமே தலா 8 வாக்குகள் பெற்றனர் இதனால் குலுக்கல் முறை நடந்தது. இதில் அதிமுக வேட்பாளர் பொன்மணி பாஸ்கரன் வெற்றி பெற்றார்.

பிற்பகல் நடந்த துணைத்தலைவர் காணத் தேர்தலிலும் இதே போல் இரு தரப்பும் தலா 8 வாக்குகள் பெற்றதால் மீண்டும் குலுக்கல் முறை நடத்தப்பட்டது இதிலும் அதிமுக வேட்பாளரே வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் சரஸ்வதி துணைத் தலைவரானார்.

You'r reading சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் : குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி Originally posted on The Subeditor Tamil

More Sivagangai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை