கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டா மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகிறது. மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை நேரில் ஆஜராகக் கூறி மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த சில வருடங்களாகவே மேற்குவங்க மாநிலத்தின் மீது மத்திய அரசு ஒரு கண் வைத்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜக மீதும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.
அடுத்த வருடம் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்ற பாஜக இப்போதே திட்டம் தீட்டி வருகிறது. இதனால் தான் கடந்த சில மாதங்களாக பாஜக முன்னாள் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா கொல்கத்தாவுக்கு அடிக்கடி சென்று வருகிறார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பாஜக தேசியத் தலைவர் நட்டா கொல்கத்தா சென்றிருந்தார். தேர்தல் குறித்து மேற்கு வங்க மாநில பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக இவர் சென்றிருந்தார். அப்போது இவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தான் தாக்குதல் நடத்தியதாக அமித்ஷா குற்றம்சாட்டினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில கவர்னருக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதையடுத்து கவர்னர் ஜக்தீப் தன்கர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் மேற்கு வங்கத்தில் சட்டம், ஒழுங்கு கடுமையாக மோசமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை டெல்லிக்கு வரவழைக்க மத்திய உள்துறை தீர்மானித்துள்ளது. இருவரையும் 14ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.