முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

by Nishanth, Nov 5, 2020, 16:40 PM IST

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. ஆனாலும் இந்த அணை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. 1886ம் ஆண்டு மதுரை, ராமநாதபுரம் உள்பட மாவட்டங்களில் பாசனத்திற்காகவும், குடிநீர்த் தேவைக்காகவும் இந்த அணை ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.

1884ல் மேஜர் ஜான் பென்னி குயிக்கின் மேற்பார்வையில் அணைக் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1886ல் பணிகள் முடிவடைந்தன. தொடர்ந்து அப்போதைய சென்னை மாகாணத்தின் செயலாளர் ஹான்னிங்டன் மற்றும் திருவிதாங்கூர் மன்னர் விசாகம் திருநாள் ஆகியோர் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 999 வருடங்களுக்கு இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது இதன்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கொடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தத்தில் 7 அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. இதன்படி அணையின் பராமரிப்பைச் சென்னை மாகாண அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், தண்ணீருக்கு உரியக் கட்டணம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் இந்த ஒப்பந்தம் செல்லாது என்று கேரள அரசு அறிவித்தது. இதன் பின்னர் தமிழ்நாடும், கேரளாவும் தனித்தனி மாநிலங்கள் ஆனது. ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கக் கேரள அரசு பலமுறை முயற்சித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. கடைசியில் 1970ல் கேரள முதல்வராக அச்சுத மேனன் இருந்தபோது இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி நிலவரி ஒரு ஏக்கருக்கு ₹30 ஆகவும், அணை நீரைப் பயன்படுத்தி தமிழ்நாடு உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு ஒரு கிலோ வாட்டுக்கு ஒரு மணி நேரத்திற்கு ₹12 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் இந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லும் என்றும் குறிக்கப்பட்டது.இந்த அணையின் உயரம் 155 அடியாகும். தொடக்கத்தில் 152 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு முன் இந்த அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும் அணை உடையும் ஆபத்து இருப்பதாகவும் கேரளாவில் சிலரால் வதந்தி கிளப்பப்பட்டது. இதையடுத்து அணையின் நீர்மட்டத்தைக் கேரளா 136 அடியாகக் குறைத்தது. இதை எதிர்த்து தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பல வருடங்களாக இந்த வழக்கு நடந்து வந்தது. இறுதியில் கடந்த 2014ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகத் தமிழகம், கேரளா இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு தனியார் அறக்கட்டளை சார்பில் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவைக் கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள பிரச்சினையாகும். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது. எனவே இதுபோன்ற மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி நீதிபதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You'r reading முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை