கொரோனா கட்டுப்பாடுடன் விநாயகர் சதூர்த்தி விழா.. சந்தைகளில் மக்கள் கூட்டம்..

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதூர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக பல மாநிலங்களில் பொது இடங்களில் பெரிய விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்கப்படவில்லை.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று பிள்ளையார் சதூர்த்தி. இந்நாளில் விநாயகருக்கு கொழுக்கட்டை, சுண்டல், பொரிகடலை அவல் போன்ற பலகாரங்களை படைத்து மக்கள் உற்சாகமாக கொண்டாடுவார்கள். தமிழகத்தில் பெரும்பாலும் வீடுகளில் மக்கள் சிறிய மண்பிள்ளையாரை வைத்து வணங்கி விட்டு, மூன்றாம் நாளில் அந்த சிலைகளை கிணறு, ஆறு, குளங்களில் கரைப்பார்கள்.

வடஇந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் விநாயகர் சதூர்த்தியை மிக பிரம்மாண்டமாக கொண்டாடுவார்கள். சுதந்திரத்திற்கு முன்பே பாலகங்காதர திலகர் போன்ற தலைவர்கள், சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களை திரட்டுவதற்காக இந்த பண்டிகையை பயன்படுத்தினார்கள்.



தற்போது மகாராஷ்டிராவை போல் பெரிய பிள்ளையார் சிலைகளை பொது இடங்களில் வைத்து, பின்னர் ஊர்வலம் நடத்தி கடலில் சிலைகளை கரைக்கும் கலாச்சாரம் தமிழகத்திலும் பரவிவிட்டது. அனைத்து மாவட்டங்களிலும் இது நடைபெறுகிறது.
இந்நிலையில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இந்த தடை காரணமாக பெரிய சிலைகள் வைக்கப்படவில்லை.

எனினும், தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் சிறிய அளவிலான மண் பிள்ளையார் சிலைகள் அதிக அளவில் விற்பனையாகின. மக்கள் வீடுகளில் பிள்ளையார் சிலைகளை வைத்து, பலகாரங்கள் படைத்து கொண்டாடுகின்றனர்.
தென் மாவட்டங்களில் காலையிலேயே பிள்ளையாருக்கு படைத்து வணங்கினர். சென்னை உள்பட சில நகரங்களில் மாலையில் வணங்கும் பழக்கமும் உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement