கனவுகளை கவனிக்கலாமா...

Advertisement

தூக்கத்தில் கனவு காணும் மனிதர்கள் எல்லோருக்குமே நாம் காணும் கனவு குறித்து பல சந்தேகங்கள் இருக்கும், நடந்து முடிந்ததா? நடக்கப்போவதா? நடந்தால் எந்த மாதிரி சம்பவங்களாக அது நடக்கும்? கனவு நல்லதா கெட்டதா? என்பதாகவே இருக்கும், ஆனால் பெரும்பாலும் அதை யாரும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வது இல்லை.

கனவுகளுக்கு பலன்கள் உண்டு என்று நம்புகிறவர்களுக்கான பதிவு இங்கே:-

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே காணக் கிடக்கின்றன, நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு பலன் உண்டு. நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும், மேலும் காலை ஆறு மணிக்கு மேல் காணும் கனவுகள் பலிக்க வாய்ப்பில்லை என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை மாலை போடுவது போல் கனவு கண்டால், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால், அல்லது வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

திருமணம் ஆகாதவர்களை பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணம் ஆனவர் என்றால் செல்வம் வந்து சேரும்.

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நம்மதிப்பு உயரும். தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

கோழிக்குஞ்சி, அல்லது ஏதாவது பூ, அல்லது தேங்காய் கனவில் வந்தால், வீட்டிலோ அல்லது குடும்பத்திலோ யாருக்காவது குழந்தை பிறக்கும். தீ எரிவது போல கனவில் வந்தால் வீட்டில் பெண் பிள்ளைகள் வயதுக்கு வருவார்கள்.

குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வரப்போகும் பேராபத்து ஒன்றைக் குறிக்கும், தன்னுடைய மனைவி இறந்ததுபோல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிக்கும், இறந்துபோன மனைவி மேலுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு கண்டால், வாழ்க்கை நிம்மதியாக அமையும். மாறாக, அவள் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாகும்.

வேலையிலிருந்து நீக்கப்பட்டதுபோல் கனவு கண்டால், அவ்வாறே செயலிலும் நிகழக்கூடும். இல்லையென்றால் ஏதேனும் நிர்வாகத் தவறுகள் செய்து, மேலிட விரோதத்தைச் சம்பாதிக்க நேரிடலாம்; வருங்கால உயர்வுகளும் பாதிக்கக்கூடும்.

குடிசை வீட்டில் தாம் வசிப்பதாகக் கனவு கண்டால் ஏழ்மை நிலையை அவர் அடைய நேரிடும் என்பதைக் குறிக்கும். குடிசை தீப்பற்றி எரிவதுபோல் கனவு கண்டால், காக்கை கத்துவது போல் கனவு கண்டால் வீட்டில் களவு போகலாம்.

பூனையை கனவில் கண்டால் வியாபாரத்தில் திடீர் நஷ்டம் ஏற்படும். தேனீக்கள் கொட்டுவதை போல் கனவில் கண்டால் வீண் செலவுகள் ஏற்படும், குடும்பம் பிரியும்.

எறும்புகளை கனவில் கண்டால் மன கஷ்டம் பொருள் நட்டம் உண்டாகும். எலிகளை கனவில் கண்டால் எதிரிகள் பலம் பெருகும். இடியுடன் மழை பெய்வதைப் போல் கனவில் கண்டால், உறவினர்கள் விரோதியாவார்கள்.

புயல் காற்று, சூறாவளி ஆகியவற்றை கனவில் கண்டால், பசு நம்மை விரட்டுவதை போல் கனவில் கண்டால் நோய் உண்டாகும். குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும், செல்வாக்கு சரியும்.

ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும்.
முட்டை சாப்பிடுவது கனவு கண்டால் வறுமை பிடிக்கும். சமையல் செய்வது போல் கனவு கண்டால், அல்லது நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் வந்து சேரும்.

குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும், பொருள் வரவு அதிகமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.

சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். கோயிலைக் கண்டால் தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப் போவதைக் குறிக்கும்.

வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவுகண்டால் வறுமை நீங்கும். பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும். பழங்களை ஒருவர் தனக்குகொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும்.

குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது. கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருந்தால் வெற்றி கிட்டும், நோயுற்றிருப்பின் நோய் அகலும்.

குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும், திருமணமாகியிருந்தால் புத்திர பாக்கியமும் உண்டாகும்.

குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு. ஆனால் குருவிக்கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.

குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.

குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே. ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும், தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.

குருவிகள் இறந்து கிடப்பதைக்கண்டால்கூட கெடுபலன் தான், பல தொல்லைகள் உண்டாகும். அடுப்பு சுவாலையுடன் எரிந்துகொண்டிருப்பதாகக் கண்டால்தொழிலில் விருத்தி ஏற்படும். புதிதாகதொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.

அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோஅதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேர்ந்தால் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்டமும் உண்டாகும். எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காண நேர்ந்தால் எதிர்பாராத நஷ்டம் ஏற்படும்.

அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம். நீர்க்குமிழியைக் கண்டால் சிறுசிறு நஷ்டங்கள் ஏற்படும்.
பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர்.

எலுமிச்ச மரம், எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும். அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்லதல்ல, குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம் நேரப் போவதைக் குறிக்கும்.

எலுமிச்ச மரத்தில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும். அதுவே பழமாக இல்லாமல், காயாக இருப்பின் பண வரவு தாமதமாய்க் கிடைக்கக்கூடும். எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்டநஷ்டங்களுக்கு ஆளாக நேரும்.

தெளிந்த நீரைக்கண்டால் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்லகாலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம். பேனா அல்லது எழுதுகோல்எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.

வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசிர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் நீண்ட ஆயுளும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கை மிகும். சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நெருங்கியவர்களிடம் நம்பி மோசம் போவார்கள்.

ஒரு கதவையோ பூட்டையோதிறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர். இயற்கை மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும், குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி என கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம், விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம்,பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திரதானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை
என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது.

நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், மூளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன.

இதற்கு பலன்களாக நாம் மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம் நம்மால் ஏற்படுத்தபட்டவைதான். அவையெல்லாம் ஆணித்தரமான உண்மைகள் என்று சொல்லிவிட முடியாது. "நம்பிக்கை" அவ்வளவு தான்.!

`அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோலத்தான், கனவுகளும் அது தொடர்பான பலன்களும்! நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம். அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீய பலனுக்கும்! தீயது நடக்குமென்று எதிர்பார்த்தால் நல்லது நடந்தாலும் அது நமக்கு தீயதாகவே தெரியும்.

பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம். பாலூட்டி இன மிருகம்தானே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும் பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன.

அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம். பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம் பெறுவதில்லை. சத்தம் மட்டுமே வரும்.

வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி கைக்குழந்தைகளும் கனவு காண்கின்றன.
ஏன்… தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது. மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன.

நாம் அடைய நினைக்கும் உயர்நிலையை, நமது லட்சியங்களை, நம் எண்ணங்களை.. வாக்கியங்களாகவோ ஓவியங்களாகவோ அமைத்து, அதை நம் பார்வையில் படும்படி வைப்பது நல்ல பலனைத் தரும். ஏனெனில் எது கண்களில் படுகின்றதோ அது மனதில் ஆழமாகப் பதிகின்றது. மனம் தொடர்ந்து எதை நினைக்கின்றதோ, அதுவாகவே நாம் ஆகிறோம்.

வெற்றியின் முதல் கட்டம் நம்மை நாமே வெற்றியாளராக பார்ப்பதுதான். இதுமட்டும் வெற்றிக்கான காரணமாகிவிடாது, கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும், கண்முன்னே தெரியும் வாசகங்களும், ஓவியங்களும் நிஜம் பெற சரியான திட்டங்கள் தேவை.

நான் கண்ட கனவு பலிச்சிடுச்சி என்று சிலர் சொல்கிறார்கள். நான் கண்ட கனவு பலிச்சிடுமோ அது மாதிரியே ஆகிடுமோ ? என்று சிலர் பயப்படுகிறார்கள்.

நம்மை சுற்றி எதிர்பாரத ஒரு சம்பவம் நடக்கும் போது, நம் மனதில் ரீவைண்ட் செய்து பார்தோம் என்றால் சில நினைவுகள் பிடிபடும். அதை பின் தொடர்ந்தே சென்றோமானால், என்றோ ஒருநாள் கண்ட கனவு ஞாபகத்துக்கு வரும். அப்போது நாம் கனவு பலித்துவிட்டது என்று ஆச்சர்யப்படுவோம்.

அப்போது கனவு நமக்கு கனவு தேவையாக உள்ளது என நம் மனம் தீர்மானிக்கிறது. நல்லது நடந்தால் கனவை ஆதரிக்கிறோம். இல்லையென்றால் அதை எதிர்க்கிறோம். இதுதான் மனித இயல்பு.

கனவுகள் நம் எதிர்காலத்தை உணர்த்துமா என்ற கேள்வி, மனித இனம் தோன்றிய நாள் முதல் கேட்கப்படுவது தான். எதிர்காலத்தை திட்டவட்டமாக படம் பிடித்து காட்டுகிறது என்று சொல்ல முடியாத போதிலும் சூசகமாக தெரிவிக்கிறது என்று சொல்லலாம். நமது பயமோ அல்லது மனஅழுத்தமோ நாம் காணும் கனவுகளுக்கு அடிப்படையான காரணங்களாக அமைகின்றன.

பரீட்சைக்குப் போகும் சூழ்நிலையில் நாம் இருந்தால், கனவுக்கு முந்தைய நாளில், 'ஐயோ, எப்படி எழுதப்போகிறோமோ!' என்று பயத்துடன் இருந்தால் உங்கள் கனவுகள் அது சம்பந்தமானதாக இருக்கும்.

எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அவை கனவுகளில் வருகின்றன. நீங்கள் கிரிக்கெட் விளையாடுபவராக அல்லது ரசிகராக இருந்தால் உங்கள் கனவுகள் அதைச் சுற்றியே பெரும்பாலும் அமையும். யாரிடமாவது நாம் மிக அன்பு செலுத்தினாலோ அல்லது யாரையாவது காதலித்தாலோ அவர்களைப் பற்றிய கனவு காண்பீர்கள்!

அதேபோல் நம்மில் பலர் யாரோ நம்மைத் துரத்துவதுபோலக் கனவு காண்கிறோம். இதற்காகப் பயப்படத் தேவையில்லை. இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியாவிட்டாலும் உங்களைப்போல பெரும்பாலானவர்கள் இதே மாதிரி கனவுகளைக் காண்கிறார்கள். அதனால் இந்த செய்தி உங்களுக்கு ஓரளவு ஆறுதலாய் இருக்கும்!

அநேக மனிதர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு முதல் ஏழு கனவுகள் வரை காண்கிறார்கள். ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம்! பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.

குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் நமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விஷயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஐந்தாவது படிக்கும் வயது வரும்போது சிறுவர்கள் நன்றாகவே கனவு காண்கிறார்கள். என்னதான் நாம் கனவை காதலித்து, அதனுடன் குடும்பம் நடத்த ஆசைப்பட்டு மணிக்கணக்கில் தூங்கினாலும், கனவு கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு அரைமணி நேரத்திற்கு தான் நீடிக்குமாம்.

ஆனால், கனவுகள் எதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சொல்லும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் நமது கனவுகளை பதிய வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம். கேமரா வைத்து வீடியோவாக்கி சமூக வளைதளங்களில் கூட பதிவிடலாம்.

ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. அதுவரை அன்றைய தின குழப்பங்களில் இருந்து தெளிவு பெற்று, மனதிற்கு அமைதி கொடுத்து மகிழ்ச்சியோடு உறங்கச் செல்வோம்... எல்லா விடியல்களையும் இனிய கனவின் நினைவுகளுடன் கொண்டாடுவோம்.

Links:-

இவற்றை செய்தால் எப்போதும் ஆரோக்கியம்தான்!

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறோம்? புகை பிடிக்கமாட்டார், உடல் எடையை சரியானபடி பேணுவதற்கு முயற்சிக்கிறார், பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்து மிக்கவை என்று ஆரோக்கியமான உணவு பொருள்களை மட்டும் சாப்பிடுகிறார், ஒழுங்காக உடற்பயிற்சியில் ஈடுபடுகிறார் - ஆரோக்கிய வாழ்வின் காரணிகளாக கூறப்படும் இவற்றின் அடிப்படையில்தான் ஆரோக்கியத்தை அளவிடுகிறோம். Read https://tamil.thesubeditor.com/news/lifestyle/15381-simple-ways-for-healthy-life.html

Advertisement

READ MORE ABOUT :

/body>