பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 100க்கும் அதிகமானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசு ஆசியர்கள் கடந்த 4- நாட்களாக பள்ளிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அரசு அறிவித்தது. ஆனால் இதை பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஆசிரியர்கள் போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.
இரவிலும் இப்போராட்டம் தொடர்ந்து. இதையடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சமூக நல கூடங்களில் அடைக்கப்பட்டனர். இவர்களை விடுதலை செய்யக் கோரி கோவை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல இடங்களில் நள்ளிரவில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போராட்டம் நடத்திய நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.