ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் பேருந்து கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும்-எம்.எச்.ஜவாஹிருல்லா

by Isaivaani, Jan 20, 2018, 16:48 PM IST

தமிழக அரசு அறிவித்த பேருந்தை கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெறும்படி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி உள்ளது தமிழக அரசு, இந்தக் கட்டண உயர்வால் ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள், ஏனெனில் பேருந்துகளில் செல்பவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் அல்ல  ஏழை, எளிய நடுத்தர  மக்கள்தான் பேருந்து பயணத்தைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.

ஏற்கெனவே, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை என வகை பிரித்து மறைமுகமாகக் கட்டணங்களை அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெள்ளை போர்டு பேருந்தின் குறைந்த பட்ச கட்டணம் ரூ.5லிருந்து ரூ.6ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் விரைவு பேருந்து ரூ.17லிருந்து ரூ.24ஆகவும், அதிசொகுசு பேருந்து ரூ.18லிருந்து ரூ.27ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  

பேருந்து கட்டண உயர்வின் மூலம் மக்கள் மீது பெரிய சுமையை ஏற்றியுள்ள தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கெனவே மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளது என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று உள்ளது.

தமிழக ஏழை நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகும், பேருந்து கட்டணத்தை உடனே திரும்ப வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You'r reading ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் பேருந்து கட்டணத்தை உடனே திரும்ப பெற வேண்டும்-எம்.எச்.ஜவாஹிருல்லா Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை