உடுமலைப்பேட்டை அருகே 5 நாட்களாக தனியார் சர்க்கரை ஆலை வளாகத்திருந்த சின்னத்தம்பி யானை விரட்டப்பட்டதால் வயல்வெளிகளில் சுற்றி வருகிறது. வயல்கள் நாசமானதால் விரைந்து யானையைப் பிடித்து வனத்துக்கு அனுப்பக்கோரி விவசாயிகள் சாலை மறியல் செய்தனர்.
கடந்த ஒரு வாரமாக சாந்தமாக நல்லதம்பியாக வலம் வந்த சின்னத்தம்பி யானை நேற்று இரவு முதல் சினம் கொள்ள ஆரம்பித்துள்ளான். 5 நாட்களாக தஞ்சம் புகுந்திருந்த சர்க்கரை ஆலை வளாகத்திலிருந்து விரட்டப்பட்டதே இதற்குக் காரணம். ஆலை வளாகத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பசியாறி விட்டு அருகில் புதர் மறைவில் இருந்த தண்ணீர் குட்டையில் ஹாயாக ஓய்வு எடுத்து வந்தான் சின்னத்தம்பி .
நேற்று திடீரென அந்தக் குட்டையை மண் அள்ளி மூடியதுடன் புதர்களையும் சுத்தப்படுத்திவிட்டது சர்க்கரை ஆலை நிர்வாகம் . இதனால் ஒதுங்க இடமின்றி அருகிலுள்ள திருஷ்ணாபுரம் பகுதியில் நெல்வயல், கரும்புத் தோட்டங்களில் சற்று கோபமாக சுற்றிச் சுற்றி வருகிறான்.
விளைந்த நெற்பயிர்களும், கரும்பும் சேதமடைந்ததால் வருத்தமடைந்த விவசாயிகள் கிருஷ்ணாபுரத்தில் உடுமலை-பழநி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சின்னத்தம்பி யானையைப் பிடித்து வனத்தில் விடும் பணிகளை தீவிரப்படுத்துமாறு வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கிடையே வரும் 10-ந்தேதி வரை சின்னத்தம்பி யானையின் நடவடிக்கையை கண்காணித்து 11-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சி 11-ந் தேதிக்கு மேல்தான் இருக்கும் என்று தெரிகிறது. அதுவரை சின்னத்தம்பி நல்லதம்பியாக இருப்பானா? அல்லது கோபம் கொண்டு விடுவானா? என்ற அச்சத்தில் உடுமலை மக்கள் உள்ளனர்